ஆறுமுகநேரியில் வீட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் வியாபாரி கைது


ஆறுமுகநேரியில் வீட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் வியாபாரி கைது
x
தினத்தந்தி 5 Dec 2018 3:30 AM IST (Updated: 5 Dec 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் வீட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆறுமுகநேரி, 

ஆறுமுகநேரியில் வீட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரியை கைது செய்தனர்.

வீட்டில் பதுக்கிய...

ஆறுமுகநேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனாலும், சில கடைகளில் புகையிலை பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கடைகளுக்கு குறிப்பிட்ட இடத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டு, பதுக்கி வைத்து வியாபாரி ஒருவர் சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்துள்ள இடத்தை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஆறுமுகநேரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வியாபாரியான குணசேகரன் (வயது 33) வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

வியாபாரி கைது

இதை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் குணசேகரனின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு 8 மூட்டைகளில் பதுக்கி வைத்து இருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரியான குணசேகரனை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘ நெல்லை டவுனில் உள்ள ஒரு கடையில் இருந்து புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி, அவற்றை ஆறுமுகநேரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததாக’ தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story