திருவொற்றியூரில் குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
திருவொற்றியூரில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் மீனவ குடியிருப்பில் வீடுகள் பழுதாகி இருந்தன. இதில் 492 வீடுகள், ரூ.24½ கோடி செலவில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 18 மாதங்களுக்குள் வீடுகள் கட்டித்தருவதாக குடிசை மாற்று வாரியம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 3 வருடங்கள் ஆகியும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு, கழிவு நீர் செல்லும் வசதி, குடிநீர் வசதி என எந்த வேலையும் நடைபெறாமல் கடந்த 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே வெளியில் வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த மீனவர்கள், அரசு வழங்குவதற்கு முன்பே தாங்களாகவே வீடுகளில் குடியேறினர். ஆனால் இதுவரை அந்த வீடுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வழிவகை செய்து தராததால் மீனவ பெண்கள், திருவொற்றியூரில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அதிகாரி, குடிசைமாற்று வாரியம் சார்பில் திருச்சிணாங்குப்பம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ரூ.73 லட்சம் வழங்க வேண்டும் அதனை இதுவரை வழங்கவில்லை. எனவே அந்த பணம் வழங்கப்படும் வரை குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க சாத்தியம் இல்லை. எனவே மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஆவன செய்வதாக உறுதி அளித்தார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story