தேசிய அளவில்: நீலகிரி முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக திகழ்கிறது - கலெக்டர் பேச்சு


தேசிய அளவில்: நீலகிரி முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக திகழ்கிறது - கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 5 Dec 2018 3:45 AM IST (Updated: 5 Dec 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவில் நீலகிரி முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக திகழ்கிறது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மேலாண்மை மற்றும் மேம்பாட்டு குழுக்களை சேர்ந்த ஆதிவாசி உறுப்பினர்களுக்கு ஒருநாள் பயிற்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. பயிற்சிக்கு மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன் முன்னிலை வகித்தார். பயிற்சியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டம் தோன்றி 150 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்ப காலத்தில் நீலகிரியில் ஆதிவாசி மக்கள் வாழ்ந்து உள்ளனர். அப்போது இந்த மாவட்டம் மிகவும் இயற்கை அழகாக இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. நான் வறட்சி மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து நீலகிரி மாவட்டத்துக்கு கலெக்டராக வந்து உள்ளேன். நீலகிரியின் பசுமையை வர்ணிக்க முடியாது. அவ்வளவு அழகாக காணப்படுகிறது. வீடுகள் கட்ட அனுமதி வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் நீலகிரியின் அழகு மற்றும் பசுமையை இழக்கக்கூடாது என்பதே ஆகும்.

இயற்கை அழகு

கட்டிடங்களை ஓராண்டில் கட்டி முடித்து விடலாம். ஆனால் இயற்கை வனப்பகுதிகளை உருவாக்க 100 ஆண்டுகள் என்றாலும் முடியாது. தேசிய அளவில் நீலகிரி மாவட்டம் தான் முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக திகழ்கிறது. இதற்கான அறிவிப்பை யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்து உள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இயற்கை அழகு தற்போது இல்லை. அந்த அழகை பேணி பாதுகாப்பது ஆதிவாசி மக்களிடம் உள்ளது. இதற்காக 10 சூழல் சுற்றுலா மேலாண்மை மற்றும் மேம்பாட்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த குழுக்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொள்வதுடன் வனப்பகுதிகளை தூய்மையாக வைக்கவும், சுற்றுலா பயணிகளை அனுமதிக்கப்பட்ட வனப்பகுதிக்கு அழைத்து செல்லவும் முடியும். ஆதிவாசி மக்கள் வனப்பகுதியை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகை ஆதிவாசி மக்கள் பாதுகாக்க வேண்டும். மேலும் நீலகிரியை தூய்மையாக வைக்க அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் புஷ்பாகரன் பேசும்போது, முதுமலை வனப்பகுதியில் உள்ள 360 ஆதிவாசி குடும்பங்களில் இருந்து 150 பேருக்கு வேட்டை தடுப்பு காவலர், தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியாளர் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. முதுமலை புலிகள் காப்பக பணிகளுக்கு ஆதிவாசி மக்களையே பயன்படுத்தி வருகிறோம். இதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், வனப்பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றார். இதில் பழங்குடியின ஆராய்ச்சி மைய இயக்குனர் சுப்ரமணியம், உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பயிற்சியில் தோடர் இன மக்களின் குழந்தைகள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடினர்.

Next Story