போலீஸ் போல நடித்து மாணவர்களிடம் கேமராக்கள் பறிப்பு மர்மநபருக்கு வலைவீச்சு
மீனம்பாக்கத்தில் போலீஸ் போல நடித்து பள்ளி மாணவர்களிடம் விலை உயர்ந்த கேமராக்களை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பழவந்தாங்கல் கபிலர் தெருவை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகன் நவீன் (வயது 16). நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
நவீன், தன்னுடன் படிக்கும் 10 நண்பர்களுடன் சேர்ந்து ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 2 கேமராக்களுடன் மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள திரிசூலம் மலையடிவாரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் மைதானத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் கேமராக்களால் படம் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது, ‘டிப்–டாப்’ உடை அணிந்து வந்த நபர் ஒருவர், தன்னை போலீஸ் என்று கூறினார். மேலும், இது தடை செய்யப்பட்ட பகுதி. நீங்கள் எப்படி வந்தீர்கள்? என்று மிரட்டியதோடு, மாணவர்களிடம் இருந்த 2 கேமராக்களையும் வாங்கிக்கொண்டார்.
மர்மநபருக்கு வலைவீச்சு
பின்னர், பெற்றோருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து கேமராக்களை வாங்கி கொள்ளுமாறு கூறி சென்றுவிட்டார். உடனே நவீன் தனது தந்தை சிவராமனிடம் நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரித்தபோது, கேமராக்களை வாங்கி சென்ற நபர் அங்கு பணிபுரியவில்லை என்பது தெரியவந்தது.
அப்போது போலீஸ் போல நடித்து கேமராக்களை மர்மநபர் பறித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மீனம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story