சபரிமலை பிரச்சினை எதிரொலி: பக்தர்கள் அணியும் மாலை தயாரிப்பு தொழில் பாதிப்பு
சபரிமலை பிரச்சினை எதிரொலியாக அய்யப்ப பக்தர்கள் அணியும் மாலை தயாரிப்பு தொழில் பாதிப்படைந்துள்ளது.
காரமடை,
கேரளாவில் உள்ள சரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பினை மாநில அரசு அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இதனை எதிர்த்து பெண்கள் உள்பட அய்யப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த பிரச்சினை காரணமாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் சபரிமலை சீசன் களைகட்டாமல் இருந்து வருகிறது.
பொதுவாக மலைக்கு செல்வதாக இருந்தால் இதில் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவார்கள். இந்த மாலைகள் தமிழகத்திலிருந்துதான் அதிகளவில் விற்பனைக்கு செல்கிறது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவால் மாலை தயாரிப்பு தொழிலும் மந்தமான நிலையில் இருப்பதாக கூறுகின்றனர். இது குறித்து காரமடை நரிக்குறவர் சங்க தலைவர் கணேசன் கூறியதாவது:-
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் திம்மம்பாளையம், காந்திநகர் நரிக்குறவர் சங்கம் சார்பில் தயாரிக்கப்படும் மாலைகள்தான் அதிகளவில் விற்பனைக்கு செல்கின்றன. இந்த சங்கத்தில் காரமடை, பிரஸ்காலனி, செட்டிப்பாளையம், துடியலூர், பல்லடம் அறிவொளிநகர், போன்ற பகுதிகளை சேர்ந்த 750 குடும்பங்கள் உறுப்பினராக இருந்து மாலை தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அய்யப்ப பக்தர்கள் அணிந்து செல்லும் மாலைகளை பொறுத்தவரை துளசி மணிமாலை, ருத்ராட்ச மாலை, சந்தன மாலை, நவரத்தின மாலை, படிகார மாலை, தாமரை மணிமாலை போன்றவை முக்கியமானவை.
அய்யப்பபக்தர்கள் கார்த்திகை, மார்கழி மாதங்களில்தான் அதிக எண்ணிக்கையில் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல மாலை அணிகின்றனர். இது தவிர பழனி முருகன்கோவிலுக்கு செல்ல முருக பக்தர்கள் மாலை அணிகின்றனர்.
பக்தர்களில் பெரும்பாலும் துளசி, ருத்திராட்சை, சந்தனம், படிகாரம், குங்குமம் ஆகிய மாலைகளை அணிகின்றனர். இதில் குங்கும மாலை உடலில் ரத்த ஒட்டத்தை சீராக்கும், ருத்திராட்ச மாலை அணிந்தால் விஷ ஜந்துக்கள் அண்டாமல் இருக்கும், துளசி மணி மாலை ஆன்மீக சிந்தனையை அதிகப்படுத்தும். அமைதியை ஏற்படுத்தும். மாலைக்கான மூலப்பொருட்கள் டெல்லி, காசி, மதுரா, கயா போன்ற இடங்களிலிருந்து வாங்கப்படுகிறது. மணிகள் கட்ட தூய்மையான செம்புக்கம்பியை பயன்படுத்துகிறோம். இங்கு தயாரிக்கப்படும் மாலைகள் இந்தியா முழுவதும் செல்கிறது. கோவை, சென்னை, கேரளாவுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கிறோம். காதிகிராப்ட் கடைகளில் இருந்தும் மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆண்டு தோறும் மாலைகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மாலைகளின் வியாபாரம் சூடுபிடிக்கும். கடந்த மூன்று வருடங்களாக தொழில் பாதிப்படைந்துள்ளது.
இதற்கு காரணம் போதிய பணப்புழக்கம் இல்லாமைதான். தற்போது சபரிமலை பிரச்சினை பெருமளவில் தொழிலை நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது.வழக்கமாக இந்த சீசனில் விற்கும் மாலைகளில் 50 சதவீதம் தான் விற்பனை ஆகிறது.சுமார் 50 சதவீதம் தேங்கிக்கிடக்கிறது.
விற்பனை இல்லாததால் தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் தொழிலில் ஈடுப்பட்டுள்ள 750 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. வங்கிக் கடன், மானிய கடன் போன்ற சலுகைகள் எங்களுக்கு கிடைப்பதில்லை.
மேலும் நரிக்குறவர்களை எஸ்.டி.பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே எங்கள் மீது அரசு தனிக்கவனம் செலுத்தி இத்தொழிலை ஊக்குவிக்கவும், வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் ஆவன செய்ய வேண்டும். அப்போதுதான் எங்களது வாழ்வாதாரம் மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story