இந்த மாதத்தில் பணிகள் தொடங்கும்: நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.78½ கோடியில் புதுப்பிப்பு கலெக்டர் ஷில்பா தகவல்


இந்த மாதத்தில் பணிகள் தொடங்கும்: நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.78½ கோடியில் புதுப்பிப்பு கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:00 AM IST (Updated: 5 Dec 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.78½ கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. இதற்கான பணிகள் இந்த மாதத்தில் தொடங்குகிறது என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.78½ கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. இதற்கான பணிகள் இந்த மாதத்தில் தொடங்குகிறது என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

‘ஸ்மார்ட்’ சிட்டி திட்டம்

இந்தியா முழுவதும் ‘ஸ்மார்ட்’ சிட்டி திட்டத்தின் கீழ் பல முக்கிய நகரங்கள் நவீனப்படுத்தபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்கள் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியும் சேர்க்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி நடைபெற உள்ளன.

இதில் ஒரு கட்டமாக நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.78 கோடியே 50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதில் கீழ்பகுதியில் (அண்டர் கிரவுண்ட்) கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளன. தரைதளத்தில் பஸ் நிறுத்தும் வசதியும், முதல், இரண்டாவது தளத்தில் கடைகள், தங்கும் விடுதிகள், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைய உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் கலெக்டர் ஷில்பா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு கட்டப்பட உள்ள கட்டிடத்தின் மாதிரி வரைபடத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது கட்டுமான பணி நடக்கும் போது பஸ் போக்குவரத்தை எப்படி மாற்றி அமைப்பது என்று கலெக்டர் ஷில்பா, அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அதிகாரிகள் நெல்லை டவுன் பகுதி மற்றும் மேற்கு பகுதியில் இருந்து வருகின்ற பஸ்களை பொருட்காட்சி மைதானத்திலும், நெல்லை சந்திப்பு வரும் பஸ்களை பஸ்நிலையத்தின் அருகே ரோட்டு ஓரத்தில் நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்கிச்செல்லலாம் என்றும் கூறினார்கள். இதற்கு சில அதிகாரிகள் சாத்தியப்படாது என்று கூறினார்கள்.

உடனே கலெக்டர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த மாதத்தில் தொடங்கும்

நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் புதுப்பிக்கப்பட உள்ள பணிகள், குறித்த காலத்திற்கு முன்பாகவே முடிக்கப்படும். மேலும், பஸ் நிலையத்திற்கு வருகின்ற பஸ்களை பொதுமக்களுக்கு சிரமமின்றி மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்நிலைய பணிகள் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

முதற்கட்ட பணிகள் இந்த மாதம் தொடங்கப்படும். மேலும், அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தினை செயல்படுத்துவதோடு, வியாபாரிகள், பொதுமக்கள், டிரைவர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த பஸ் நிலையம் ரூ.78 கோடியே 50 லட்சம் மதிப்பில் மிகவும் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு பணிகள் முடிந்தவுடன் இந்த பஸ் நிலையத்தினை நெல்லை மாவட்டத்தின் ஒரு அடையாளமாக மாற்ற வேண்டும்.

தனியார் ஆம்னி பஸ்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பயணிகளுக்கு சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணீஸ் நாரணவரே, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர், செய்தி மக்கள் தொடர்புத்துறை துணை இயக்குனர் அண்ணா மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், பயணிகள் சங்க பிரதிநிதிகள், ஆம்னி பஸ் பிரதிநிதிகள், அரசு போக்குவரத்து அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story