நெல்லையில் பள்ளி மாணவியிடம் ரூ.6 லட்சம் நகை-பணம் அபேஸ் காதலிப்பதுபோல் நடித்து சுருட்டிய வாலிபர் கைது


நெல்லையில் பள்ளி மாணவியிடம் ரூ.6 லட்சம் நகை-பணம் அபேஸ் காதலிப்பதுபோல் நடித்து சுருட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2018 3:00 AM IST (Updated: 5 Dec 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

காதலிப்பது போல் நடித்து பள்ளி மாணவியிடம் ரூ.6 லட்சம் நகை, பணத்தை அபேஸ் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை, 

காதலிப்பது போல் நடித்து பள்ளி மாணவியிடம் ரூ.6 லட்சம் நகை, பணத்தை அபேஸ் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காதல் படுத்தும் பாடு

காதலுக்காக உயிரையே கொடுப்பவர்களை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் ஒரு வாலிபர் காதல் நாடகம் ஆடி பிளஸ்-1 மாணவியிடம் இருந்து நகை, பணத்தை அபேஸ் செய்து விட்டார். காதல் படுத்திய பாட்டில் அந்த மாணவியும் நகை, பணத்தை வாரி வழங்கி உள்ளார்.

நெல்லையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நெல்லை டவுன் ஆசாத் ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர், பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஒரு மோதலில் ஈடுபட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுதலையாகி வெளியே வந்த அவர் மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

பிளஸ்-1 மாணவி

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிளஸ்-1 மாணவி ஒருவர் அவரது பார்வையில் விழுந்தார். அந்த மாணவியை காதலிப்பது போல் நடித்து தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அந்த வாலிபர் முடிவு செய்தார்.

மாணவி பள்ளிக்கூடத்துக்கு சென்று வரும்போது அவரை பின்தொடர்ந்து சென்று ஆசை வார்த்தை கூறி காதல் வலை விரித்தார். அதனை கண்டுகொள்ளாமல் மாணவி இருந்தார். ஆனால் அந்த வாலிபரின் தொடர் முயற்சியால் மாணவி காதல் வலையில் வீழ்ந்தார். அந்த மாணவியை சினிமா தியேட்டர், பூங்கா என பல்வேறு இடங்களுக்கு வாலிபர் அழைத்துச் சென்றார்.

அந்த வாலிபருக்கு மது குடிக்க, ஊர் சுற்றுவதற்கு, ஜாலியாக வாழ்வதற்கு பணம் தேவைப்பட்டது. இதையடுத்து தனது காதலியான பிளஸ்-1 மாணவியிடம், நாம் கணவன்-மனைவியாக வாழப்போகிறோம். எனவே உனது வீட்டில் இருந்து நகையை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து விடு, திருமணத்துக்கு பிறகு அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார். இதை நம்பிய மாணவி வீட்டில் இருந்து ஒவ்வொரு நகையாக எடுத்து வந்து தனது காதலனிடம் கொடுத்துள்ளார்.

ரூ.6 லட்சம் நகை-பணம்

மேலும் சில சமயங்களில் அந்த வாலிபர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி நகை, பணத்தை கேட்டுள்ளார். தன்னுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை காட்டியும் மிரட்டி உள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி வேறு வழியின்றி நகை, பணத்தை எடுத்து கொடுத்துள்ளார்.

இவ்வாறு கடந்த 6 மாதங்களில் ரூ.5½ லட்சம் மதிப்புள்ள 27½ பவுன் தங்க நகைகள், ரூ.45 ஆயிரம் ஆகியவற்றை அந்த மாணவி கொடுத்துள்ளார். நகைகளை விற்று அந்த வாலிபர் மோட்டார் சைக்கிள், செல்போன்கள் வாங்கி பயன்படுத்தியதோடு ஜாலியாகவும் செலவழித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த மாணவியின் பெற்றோருக்கு சமீபத்தில் திருமண நாள் வந்துள்ளது. அதையொட்டி வீட்டில் இருந்த நகைகளை எடுத்து அணிந்து கொள்ள அவர்கள் முடிவெடுத்தனர். பீரோவில் தேடிப்பார்த்த போது அங்கிருந்த நகைகளை காணவில்லை. இதுகுறித்து மகளிடம் விசாரித்தனர். அப்போதுதான் தங்களுடைய மகள் நகைகளை அந்த வாலிபரிடம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாலிபர் கைது

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி மாணவியையும், அந்த வாலிபரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.

அப்போது மாணவி தனது காதலனிடம் நகைகளை வாரி வழங்கியதும், அந்த வாலிபர் நகை, பணத்தை பெறுவதற்காக காதல் நாடகம் ஆடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து, பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Next Story