தரமான சத்துணவு வழங்கக்கோரி: அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் - தாசில்தார் பேச்சுவார்த்தை
தரமான சத்துணவு வழங்கக்கோரி அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 137 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவில் வண்டுகள் கிடப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெற்றோர் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி மாணவ-மாணவிகளுக்கு தரமான சத்துணவு வழங்குவதாக உறுதி அளித்தனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் உறுதி அளித்தபடி பள்ளிக்கூடத்தில் தரமான சத்துணவு வழங்குவது இல்லை என பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகாஷ் தலைமையில் சுமார் 50 பேர் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் தாசில்தார் மகேந்திரன், நியூகோப் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் தாசில்தார் மகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தரமான சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மற்றும் சத்துணவு ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சத்துணவு அறைக்கு சென்ற தாசில்தார் மகேந்திரன் அங்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு குறித்து கணக்கிட்டார். பின்னர் இனி வரும் காலங்களில் தரமான சத்துணவு வழங்கப்படும். அவ்வாறு இல்லை எனில் சம்பந்தப்பட்ட சத்துணவு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை ஏற்று பெற்றோர் கலைந்து சென்றனர். இது குறித்து தாசில்தார் மகேந்திரன் கூறியதாவது:-
சமைத்து வைத்திருந்த சத்துணவு பரிசோதிக்கப்பட்டது. மேலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அளவு சரியாக இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தரம் குறித்து இனி வரும் காலங்களில் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story