கஜா புயல் சேதத்திற்கு நிவாரணம் கேட்டு கலெக்டரிடம் மூதாட்டி கொடுத்த மனு, வீட்டு திண்ணையில் கிடந்ததால் பரபரப்பு


கஜா புயல் சேதத்திற்கு நிவாரணம் கேட்டு கலெக்டரிடம் மூதாட்டி கொடுத்த மனு, வீட்டு திண்ணையில் கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Dec 2018 11:00 PM GMT (Updated: 4 Dec 2018 7:55 PM GMT)

கஜா புயல் சேதத்திற்கு நிவாரணம் கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மூதாட்டி கொடுத்த மனு, அவரது வீட்டு திண்ணையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை காந்திநகர் 6-ம் வீதியை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 65). இவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில், தனது வீடு கஜா புயலுக்கு கடுமையாக சேதமடைந்துள்ளதால், கலெக்டர் தனது வீட்டை பார்வையிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி, மனுவுடன் சேதமடைந்த வீட்டின் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணைத்து கலெக்டர் கணேஷிடம் கொடுத்தார்.

இதையடுத்து தனக்கு எப்படியும் நிவாரணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் மீனாட்சி இருந்தார். இந்நிலையில் நேற்று காலை மீனாட்சி வீட்டு திண்ணையில் ஒரு வெள்ளை காகிதம் கிடந்தது. அதை எடுத்து பார்த்த மீனாட்சி அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில், அது, கஜா புயலால் சேதமடைந்த தனது வீட்டிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கோரி, மீனாட்சி புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கொடுத்த மனுவாகும்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கொடுத்த மனு எப்படி தன் வீட்டு திண்ணைக்கு வந்தது என தெரியாமல் மீனாட்சி தவித்து வருகிறார். நிவாரணம் கிடைக்கும் என காத்திருந்த மீனாட்சிக்கு அவர் கொடுத்த மனுவே, வீட்டிற்கு திரும்பி வந்ததால் அதிர்ச்சி அடைந்து உள்ளார். மீனாட்சி கொடுத்த மனுவை விசாரிக்க வந்த அதிகாரிகள் மனுவை விட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தெரியவில்லை. ஏற்கனவே கஜா புயலுக்கு வீடு சேதமடைந்ததால் சோகத்தில் இருக்கும் மீனாட்சி, தான் கலெக்டரிடம் கொடுத்த மனு கேட்பாரற்று தன் வீட்டு திண்ணையிலேயே கிடந்ததால் மேலும் சோகத்தில் உள்ளார். இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கலெக்டரிடம் கொடுத்த மனு மூதாட்டி வீட்டு திண்ணையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story