மெட்ரோ ரெயில் மூலம் தேனாம்பேட்டை - வண்ணாரப்பேட்டை இடையே நள்ளிரவில் சோதனை ஓட்டம்
தேனாம்பேட்டை (ஏ.ஜி-டி.எம்.எஸ்.) வண்ணாரப்பேட்டை இடையே 10 கி.மீ. தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் நேற்று நள்ளிரவில் சோதனை ஓட்டம் நடந்தது. விரைவில் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை,
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கி.மீ. தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையே 22 கி.மீ. தொலைவிற்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வந்தது. இந்த 2 வழித்தடங்களில், 21.1 கி.மீ. தொலைவுக்கு பறக்கும் பாதையிலும், 24 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதையிலும் பணிகள் நடந்து வருகிறது.
சுரங்கப்பாதை பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேனாம்பேட்டை (ஏ.ஜி-டி.எம்.எஸ்) வண்ணாரப்பேட்டை இடையே 10 கி.மீ. தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு இந்த பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
3 வாரங்கள்
சென்னையில் மெட்ரோ ரெயில் அமைக்கும் திட்டத்தில் 34 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பணிகளை முடித்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மீதம் உள்ள தேனாம்பேட்டை (ஏ.ஜி-டி.எம்.எஸ்.) வண்ணாரப்பேட்டை (வழி சென்டிரல்) இடையே 10 கி.மீ. தூரம் கொண்ட சுரங்கப்பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் கட்டுமானப்பணிகள், சிக்னல்கள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. இதனை தொடர்ந்து சுரங்கப்பாதையில் உள்ள உயர் அழுத்தமின்பாதையில் மின்சாரத்தை செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் இந்த பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது.
சோதனையின் போது ஏ.ஜி-டி.எம்.எஸ். ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில், ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்டிரல், ஐகோர்ட்டு, மண்ணடி வழியாக வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையத்தை அடைந்தது. மீண்டும் அதே பாதையில் திரும்பி வந்தது. தொடர்ந்து இந்த பாதையில் 3 வாரங்களுக்கு மெட்ரோ ரெயில் மற்றும் டீசல் என்ஜின் இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது.
விரைவில் போக்குவரத்து
அதனைத்தொடர்ந்து இம்மாத இறுதியில் பெங்களூருவில் இருந்து பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு செய்ய உள்ளார்.
ஆய்வை தொடர்ந்து பாதுகாப்பு ஆணையர் அளிக்கும் அனுமதியை தொடர்ந்து, புத்தாண்டில் அல்லது விரைவில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story