கர்ப்பம் ஆனது வெளியே தெரிந்ததால்: சிறுமிக்கு விஷம் கொடுத்து வியாபாரி தற்கொலை முயற்சி
கர்ப்பம் ஆனது வெளியே தெரிந்ததால், சிறுமிக்கு விஷம் கொடுத்து வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம்,
தேனி மாவட்டம் கம்பம்மெட்டு காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 39). பப்பாளி பழ வியாபாரி. பழங்களை கொள்முதல் செய்வதற்கு அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு சிவக்குமார் நேரடியாக செல்வது வழக்கம். அதன்படி கம்பம்மெட்டு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு வியாபார விஷயமாக சிவக்குமார் அடிக்கடி சென்று வந்தார்.
அப்போது அந்த தோட்டத்தில், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த 15 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோரை சந்தித்த சிவக்குமார், தனது வீட்டு வேலைக்காக சிறுமியை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில் சிவக்குமார் வீட்டுக்கு சிறுமியை, அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர். அப்போது திருமண ஆசைகாட்டி சிறுமியை, சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதற்கிடையே அந்த சிறுமியின் குடும்பத்தினர், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி யானைகெஜம் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் குடியேறி விட்டனர். இந்தநிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கம்பம் மாலையம்மாள்புரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமியை அவரது தயார் அழைத்து சென்றார்.
அப்போது அந்த சிறுமி, தன்னை சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து தனது உறவினரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்குள்ள தனியார் பரிசோதனை மையத்தில் சிறுமியை அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர், கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த சிறுமியை, உறவினர் வீட்டிலேயே தங்க வைத்து விட்டு தாயார், தனது கணவரை அழைத்து வருவதற்காக சென்று விட்டார். உறவினர்களும் வெளியே சென்று விட்டனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். தான் கர்ப்பம் ஆகி இருப்பது குறித்து சிவக்குமாருக்கு அந்த சிறுமி தகவல் தெரிவித்தார். இதனால் பயந்து போன சிவக்குமார், விஷத்துடன் மாலையம்மாள்புரத்துக்கு வந்தார்.
சிறுமிக்கு அவர் விஷம் கொடுத்து குடிக்க செய்தார். பின்னர் தானும் விஷம் குடித்தார். சிறிதுநேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அங்கு வந்த சிறுமியின் உறவினர்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் 2 பேரும், மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சிவக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கர்ப்பம் ஆனது வெளியே தெரிந்ததால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பயந்து போய் சிறுமிக்கு விஷம் கொடுத்து சிவக்குமாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சிவக்குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story