திருப்பூர் மாநகரில், வார இறுதி நாட்களில் போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் வாய்த்தகராறு வழக்குகள் மது குடித்துவிட்டு நடுரோட்டில் உருளும் இளைஞர்கள்


திருப்பூர் மாநகரில், வார இறுதி நாட்களில் போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் வாய்த்தகராறு வழக்குகள் மது குடித்துவிட்டு நடுரோட்டில் உருளும் இளைஞர்கள்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:00 AM IST (Updated: 5 Dec 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் வார இறுதி நாட்களில் வாய்த்தகராறு வழக்குகள் போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. மதுகுடித்துவிட்டு நடுரோட்டில் உருளும் இளைஞர்களும் உள்ளனர்.

அனுப்பர்பாளையம்,

தொழில் நகரமான திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி தற்போது அவர்களுக்கு இணையாக வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை இரவு சம்பளம் பட்டுவாடா செய்யப்படுவது வழக்கம்.

வாரம் முழுவதும் கஷ்டப்பட்டு வேலை செய்வதின் பலனாக அன்று இரவு கிடைக்கும் சம்பளத்தை ஆண் தொழிலாளர்களில் பலர் உடனடியாக டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது. இதுமட்டுமின்றி வாங்கிய சம்பளத்தை வைத்து மறுநாளும் மது குடிக்கும் பழக்கமும் ஒரு சிலருக்கு உள்ளது.

மது குடிப்பவர்கள் குடிப்பதுடன் நிறுத்தி கொள்ளாமல் வீட்டிற்கு சென்று மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் தகராறு செய்வது. ரோட்டில் செல்லும்போது இருசக்கர வாகனங்களுடன் மோதி விட்டு தகராறில் ஈடுபடுவது, பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுடன் சண்டை இழுப்பது,நடுரோட்டில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து மனைவி, பிள்ளைகளை கூட நினைக்காமல் நடுரோட்டில் அரை குறை ஆடைகளுடன் படுத்து உருளும் பரிதாப நிலையும் திருப்பூரில் அதிக அளவில் உள்ளது.

இதேபோல் தகராறு ஏற்படும் போது இருதரப்பினரும் அந்தந்த எல்லைகளுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களை நாடி செல்கின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகரத்திற்குட்பட்ட வடக்கு, தெற்கு, மத்திய, ஊரக, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாய்த்தகராறு, குடும்ப தகராறு, அடிதடி தகராறு உள்ளிட்ட வழக்குகளே அதிக அளவில் பதிவு செய்யப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டால் போலீசாருக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதுடன், கூடவே தலைவலியும் வந்து விடுகிறது.

பெரும்பாலான தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தை சனிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை மது குடிப்பதே இதுபோன்ற தகராறுகளுக்கும், வழக்குகளுக்கும் முக்கிய காரணம். ஒரு சிலருக்கு மது குடித்து விட்டால் நாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் போய் விடுகிறது. குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் காற்றில் பறந்து விடுகிறது. ஒரு சில படித்த இளைஞர்கள் கூட மது குடித்துவிட்டு நடுரோட்டில் படுத்து உருளும் காட்சிகளையும் திருப்பூரில் காண முடிகிறது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் வாய்த்தகராறு, வழிமறித்து தகராறில் ஈடுபடுவது, கையால் அடித்து தாக்குவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதலுக்காக 294 (பி), 341, 323, 32, 75 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஒரு சிலர் தவறை உணர்ந்து விட்டால் அவர்களை எச்சரித்து, அறிவுரை கூறி அனுப்பி விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். எது எப்படியோ மது குடிப்பதை நிறுத்தி விட்டு வாங்கும் சம்பளத்தை அப்படியே சென்று குடும்பத்திற்கு செலவழித்தால் குடும்பத்தில் மனைவி, குழந்தைகள் நிம்மதியாக இருப்பதுடன், போலீஸ் நிலையங்களில் போலீசாருக்கும் கூடுதல் பணி சுமை குறையும் என்பதே மறுக்க முடியாத உண்மை.


Next Story