திருப்பூர் அருகே பள்ளி கல்வித்துறையின் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் தொடங்கி வைத்தார்


திருப்பூர் அருகே பள்ளி கல்வித்துறையின் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Dec 2018 10:15 PM GMT (Updated: 4 Dec 2018 9:59 PM GMT)

திருப்பூர் அருகே பள்ளி கல்வித்துறையின் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கிவைத்தார்.

திருப்பூர்,

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தின மற்றும் குடியரசு தின மாநில அளவில் புதிய விளையாட்டு போட்டிகளான டேக்வாண்டோ, வாள்சண்டை, வளையப்பந்து, குத்துச்சண்டை போட்டிகளின் தொடக்க விழா நேற்று காலை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. விழாவுக்கு வந்திருந்தவர்களை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்(நாட்டு நலப்பணித்திட்டம்) வாசு வரவேற்றார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.

போட்டிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசியதாவது:–

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பள்ளி கல்வித்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் மாணவ–மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை தாயுள்ளத்தோடு நிறைவேற்றி உள்ளார். பாடப்புத்தகம் முதல் இலவச சீருடை, புத்தகப்பை மற்றும் காலணிகள் உள்பட 14 வகையான கல்வி உபகரணங்கள் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. கல்வித்துறையை போன்று விளையாட்டு துறையிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று(நேற்று) முதல் 6–ந் தேதி வரை(நாளை) நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 15 மண்டலங்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 1 மண்டலம் என்று மொத்தம் 16 மண்டலங்களில் இருந்து மாணவ–மாணவிகள் கலந்துகொள்கிறார்கள். இதில் டேக்வாண்டோ போட்டியில் 544 மாணவர்களும், 560 மாணவிகளும், வாள் சண்டை போட்டியில் தலா 576 மாணவர்கள், மாணவிகள், வளையப்பந்து போட்டியில் தலா 180 மாணவர்கள், மாணவர்கள், குத்துச்சண்டை போட்டியில் 560 மாணவர்கள், 605 மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

மாணவ–மாணவிகளை அழைத்து வருவதற்காக 318 அணி மேலாளர்களும், போட்டியின் நடுவர்களாக பணியாற்றுவதற்கு தேசிய, சர்வதேச அளவிலான 160 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்படுகிறது. மாணவ–மாணவிகள் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story