நோய் தாக்குதலால் பாதிப்படைந்த: மக்காச்சோள பயிர்களுடன் மனு கொடுத்த விவசாயிகள் - நிவாரணம் வழங்க கலெக்டரிடம் வலியுறுத்தல்


நோய் தாக்குதலால் பாதிப்படைந்த: மக்காச்சோள பயிர்களுடன் மனு கொடுத்த விவசாயிகள் - நிவாரணம் வழங்க கலெக்டரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Dec 2018 3:45 AM IST (Updated: 5 Dec 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து விவசாயிகள் மனு கொடுத்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தேனி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் சிலர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டத்தில் மானாவாரியாகவும், புஞ்சையாகவும் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பயிர்கள், அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புழு சோளக்கதிருக்குள் சென்று, அவை பால் பிடிக்க விடாமல் தின்றுவிடுகிறது. இதனால் முற்றிலும் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

வேளாண்மைத்துறையினர் பரிந்துரை செய்த மருந்துகளை அடித்தும் புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்புழுவின் ஜீன்கள் விதையுடன் கலந்து வந்துள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர்.

எனவே மாவட்டம் முழுவதும் கணக்கெடுத்து, அரசு மற்றும் விதை நிறுவனங்களின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சோளப்பயிர்களுடன், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து விவசாயிகள் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. எனவே தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட கால்நடைகளுக்கும் கோமாரி நோய் பாதிப்பு உள்ளது. எனவே, மருந்தின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

Next Story