குடியிருப்பு பகுதியில்: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி பொதுமக்கள் மறியல்


குடியிருப்பு பகுதியில்: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 5 Dec 2018 3:45 AM IST (Updated: 5 Dec 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கம்பம்,

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கம்பம் நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி காமாட்சி கவுடர் நகர், முகைதீன் ஆண்டவர்புரம், நந்தகோபால்சாமி நகர், வாரச்சந்தை, பழைய குப்பைக்கிடங்கு ஆகிய இடங்களில் மக்கும் குப்பைகளில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் திட்டப்பணி செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பணிகள் சில இடங்களில் முடிவடைந்து விட்டன. பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக சில இடங்களில் பணிகள் தொடங்கவில்லை. இந்தநிலையில் கம்பம் நகராட்சி 3-வது வார்டு வாரச்சந்தை பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை கைவிடக்கோரி, கம்பத்தில் தேனி தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து நகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்து தீர்வு காணுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கம்பம் நகராட்சி 3-வது வார்டில் குடியிருப்புகள், ஆரம்ப சுகாதார நிலையம், வாரச்சந்தை, பள்ளிக்கூடம், மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி ஆகியவை உள்ளன. இந்த பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினால் சுகாதாரக்கேடு ஏற்படும். இதுமட்டுமின்றி தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.

Next Story