காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைபேரம்: பா.ஜனதா தலைவர்கள் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைபேரம் பேசியதாக பா.ஜனதா தலைவர்கள் மீது பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமாரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.
பெங்களூரு,
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைபேரம் பேசியதாக பா.ஜனதா தலைவர்கள் மீது பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமாரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.
குதிரைபேரம்
கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சியை பிடித்தன. இந்த நிலையில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயன்று வருகிறது. இதற்காக மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு பா.ஜனதாவினர் குதிரை பேரம் பேசிய ‘ஆடியோ’ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைபேரம் பேசி, அவர்களை பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சிக்கும் பா.ஜனதா தலைவர்கள் மீது நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி.யான ரிஸ்வான் அர்சத் சார்பில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பா.ஜனதா தலைவர்கள் மீது புகார்
3-ந் தேதியான நேற்று (அதாவது நேற்று முன்தினம்) தொலைக்காட்சிகளில் 3.44 நிமிடங்கள் கொண்ட ‘ஆடியோ’ பதிவு வெளியானது. இந்த ஆடியோ மூலம் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, சதீஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங், நாகேந்திரா, கணேஷ், பீமாநாயக், பி.சி.பட்டீல், பிரதாப் கவுடா பட்டீல் உள்பட 10 எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வின் உதவியாளர் மற்றும் ஸ்ரீராமுலுவின் நண்பரும், துபாய் தொழில் அதிபருமான ஒருவரும் குதிரைபேரம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் ரூ.25 கோடி கொடுப்பதுடன், இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும்போது தேர்தல் செலவை ஏற்று கொள்வதாகவும், மந்திரி பதவி கொடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
எடியூரப்பா, ஸ்ரீராமுலு உள்பட பா.ஜனதா தலைவர்கள் பணம் மற்றும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி வருகிறார்கள். இதுதொடர்பான செய்திகள் செய்தித்தாள்களிலும் வெளிவந்துள்ளது. எனவே, இதுபற்றி விசாரணை நடத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story