அரசு மருத்துவமனைகளில்: டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் - நோயாளிகள் பரிதவிப்பு
சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் பணியை புறக்கணித்து டாக்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் நோயாளிகள் பரிதவித்தனர்.
தேனி,
தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் நேற்று புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
அதன்படி, தேனி மாவட்டத்திலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு செய்தனர். மாவட்டத்தில் மொத்தம் 370 அரசு டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 160 பேர் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் புறநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு பரிதவித்தனர். குறைந்த அளவில் டாக்டர்கள் பணியில் இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் இல்லாததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நோக்கி நோயாளிகள் சென்றனர். சமீப காலமாக காய்ச்சல், சளி, தலைவலி போன்ற பாதிப்புகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளுக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். அப்படிப்பட்ட சூழலில், டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சை பெறுவதற்கு நோயாளிகள் பரிதவிப்புடன் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைமையும், டாக்டர்கள் இருக்கும் சிகிச்சை பிரிவை தேடிச் செல்லும் நிலைமையும் ஏற்பட்டது.
Related Tags :
Next Story