காப்பக பொறுப்பாளர்கள் ஆதவற்ற குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராய் இருக்க வேண்டும்; நீதிபதி பேச்சு
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராய் இருக்க வேண்டும் என்று காப்பக பொறுப்பாளர்கள் மாவட்ட நீதிபதி கயல்விழி வேண்டுகோள் விடுத்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்ல காப்பாளர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமையில் நடைபெற்றது. சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ராமலிங்கம் வரவேற்று பேசினார். முதன்மை குற்றவியல் நீதிபதி சிவப்பிரகாசம், சப்–கோர்ட்டு நீதிபதி ப்ரீத்தா, நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதிகள் இசக்கியப்பன், ராதாகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி கயல்விழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகங்களும் சட்டப்படி பதிவு செய்திருக்க வேண்டும். பெண் குழந்தைகள் காப்பகங்கள் பெண் ஊழியர்களை வைத்தே இயக்கப்பட வேண்டும். காப்பகங்களில் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்போ, பாலியல் தொந்தரவோ ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். காப்பக குழந்தைகளுக்கு மனஉளைச்சல், உடல்ரீதியான பாதிப்பு போன்றவைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது.
காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதன் பொறுப்பாளர்கள் நல்ல பெற்றோராய் திகழ வேண்டும். சுயநலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தைகளை பராமரிக்க வேண்டும். குழந்தைகளின் நலன்களை பாதுகாப்பதில் உங்களுக்கு ஏதும் சட்ட பிரச்சினைகள், சிக்கல்கள் ஏற்பட்டால் சட்ட பணிகள் ஆணைக்குழுவை உடனடியாக அணுகலாம். எந்த உதவியும் செய்ய தயாராக உள்ளோம். இதற்காக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு பரிந்துரையின்படி மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ராமலிங்கம் தலைமையில் குழந்தைகள் இல்லங்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.