‘கஜா’ புயலால் சாய்ந்த மரங்களை விற்க: தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் சார்பில் கொள்முதல் நிலையம் - கலெக்டர் தகவல்
‘கஜா’ புயலால் பட்டா நிலங்களில் சாய்ந்து கிடக் கும் மரங்களை அகற்ற, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் சார்பில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’ புயல் காரணமாக விவசாய நிலங்களில் விழுந்த மரங்களை அதிக விலைக்கு விற்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி. வினய் தலைமை தாங்கினார். இதில் அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் மர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது கலெக்டர் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி ‘கஜா’ புயலால் வீசிய பலத்த காற்றுக்கு வேளாண் மற்றும் தோட்டக் கலை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு முடிந்த நிலையில், அதனை முதன்மை கண்காணிப்பாளர்கள் சரிபார்த்து வருகின்றனர். இந்த பணி முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரண தொகை செலுத்தப்படும். ‘கஜா’ புயலால் பட்டா நிலங்களில் இருந்த தேக்கு, சில்வர் ஓக், சவுக்கு, தென்னை, மா உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன.
இந்த மரங்களை அகற்றி அதிக விலைக்கு விற்கும் வகையில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், மர வியாபாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் மூலம், புயல் பாதித்த பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் அமைத்து மரங்கள் வாங்கப்படும். இதற்கு வசதியாக மரங்களை அகற்ற, வருவாய்த்துறையினர் மூலம் பட்டா நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும்.
காலதாமதத்தை தவிர்க்க, தங்கள் நிலங்களில் சாய்ந்து கிடக்கும் மரங்களை கணக்கெடுத்து விவசாயிகளே விண்ணப்பம் அளிக்கலாம். இதையடுத்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அனுமதி அளிப்பார்கள். இதுவரை, 103 பேரிடம் இருந்து தனியார் நிலங்களில் விழுந்த 22 ஆயிரத்து 550 மரங்களை அகற்ற விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. சிறு, குறு விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் வேலு, மாவட்ட வன அலுவலர்கள் தேஜஸ்வி, வித்யா, வேளாண் இணை இயக்குனர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story