மாவட்டம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில்: டாக்டர்கள் வேலைநிறுத்தம்; நோயாளிகள் அவதி


மாவட்டம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில்: டாக்டர்கள் வேலைநிறுத்தம்; நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 5 Dec 2018 3:30 AM IST (Updated: 5 Dec 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர்.

திண்டுக்கல், 

சம்பள உயர்வுக்கோரி தமிழகத்தில் அரசு டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 4-ந்தேதி வெளிநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 13 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் வெளிநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு டாக்டர்கள் சுமார் 500 பேர் உள்ளனர். இதில் சுமார் 250 டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களுக்கு பதிலாக மருத்துவ அதிகாரிகள் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் குறைவான அளவிலேயே டாக்டர்கள் பணியில் இருந்தனர்.

இதனால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்றனர். மாவட்டத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் மூலம், வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த போராட்டம் குறித்து அரசு அனைத்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு, திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

இந்தியாவில் சுகாதாரத்துறையில் தமிழகம் தான் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு சம்பளம் மிக குறைவாக வழங்கப்படுகிறது. அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் அடிப்படையில் தமிழகம் 22-வது இடத்தில் உள்ளது.

தமிழக அரசு, டாக்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது இல்லை. சம்பள உயர்வுக்கோரி கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டத்தில் சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து வருகிறோம். இதேபோல், மகப்பேறு இறப்பு குறித்து வாரம், மாதம் ஒரு முறை நடத்தப்படும் திறனாய்வு கூட்டத்தையும் புறக்கணித்துள்ளோம்.

வருகிற 8-ந்தேதி முதல் மருத்துவ காப்பீடு திட்டம் உள்பட அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் புறக்கணிக்க உள்ளோம். 10-ந்தேதி அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் தர்ணா போராட்டம் நடத்தப்படும். அதன் பின்னரும் சம்பள உயர்வுக்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வருகிற 27-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story