பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில்: ஆராய்ச்சி மாணவர்களுடன் நாசா விஞ்ஞானி கலந்துரையாடல்
பரங்கிப்பேட்டையில் உள்ள கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் ஆராய்ச்சி மாணவர்களுடன் நாசா விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேஸ்வரன் கலந்துரையாடினார்.
கடலூர்,
பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்துக்கு அமெரிக்காவின் நாசா(தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்) மூத்த விஞ்ஞானி டாக்டர் கஸ்தூரி வெங்கடேஷ்வரன் வருகை தந்தார்.
அவர் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் இந்த மையத்தில் கடல்சார் உயிரியலில் தனது முதுகலை பட்ட படிப்பை நிறைவு செய்ததுடன் இம்மையத்தின் முன்னாள் இயக்குனர் நடராஜன் வழிகாட்டுதல்படி 1982-ல் கடல் நுண்ணுயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றதை நினைவு கூர்ந்ததோடு, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கடல் அறிவியல் புல முதல்வர் மற்றும் இயக்குனர் சீனிவாசன், அறிவியல் துறை புல முதல்வர் கபிலன், முன்னாள் இயக்குனர் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கண்ணன், பேராசிரியர் அஜ்மல்கான், முன்னாள் புல முதல்வர் கதிரேசன், சம்பத்குமார், ஜெயலட்சுமி, ஆனந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு சென்று துணைவேந்தர் வி.முருகேசனை சந்தித்து பேசினார். அப்போது நாசாவுக்கு வருமாறு துணைவேந்தருக்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது பதிவாளர் ஆறுமுகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய இயக்குனர் கதிரேசன், தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி சந்திரசேகரன், வேளாண் புல முதல்வர் தனுநாதன் மற்றும் கல்வி ஆராய்ச்சி இயக்குனர் ராஜசேகரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story