2,023 அங்கன்வாடி மையங்களில்: ஒரு லட்சம் பெண்கள், குழந்தைகளுக்கு இணை உணவு - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
கடலூர் மாவட்டத்தில் 2,023 அங்கன்வாடி மையங்கள் மூலம் பெண்கள், குழந்தைகள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 521 பேருக்கு இணை உணவு வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 2,023 அங்கன்வாடி மையங்கள் மூலம் 15 ஆயிரத்து 934 கர்ப்பிணிகள், 13 ஆயிரத்து 470 பாலுட்டும் தாய்மார்கள் 81 ஆயிரத்து 117 குழந்தைகள் என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 521 பேர் இணை உணவு பெற்று பயனடைந்து வருகின்றனர்.
மேலும் கர்ப்பிணிகளை பதிவு செய்து எடை எடுத்தல், இணை உணவு வழங்குதல், ஊட்டச்சத்து குறித்த கல்வி அளித்தல், 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க அறிவுறுத்துதல், 7-வது மாதம் முதல் இணை உணவு அளித்தல், வளர் இளம்பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அறிவு, மொழி, உடல், சமூகம் மற்றும் மன எழுச்சி வளர்ச்சியை தூண்டும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு மாதம் ஒரு தலைப்பு வீதம் தன்னைப்பற்றியும், பூக்கள், காய்கறிகள், பழங்கள், பொம்மைகள், தண்ணீர், வாகனங்கள், விலங்குகள், பண்டிகைகள், வாழ்க்கைக்கு உதவும் நமது நண்பர்கள், பருவகாலங்கள், மரம், செடி, கொடிகள் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல், கதை சொல்லுதல், திட்டமிட்ட விளையாட்டு ஆகிய செயல்பாடுகள் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டு அவர்களை பள்ளி படிப்புக்கு ஆயத்தப்படுத்தப்படுகின்றனர்.
மேலும் அங்கன்வாடி மையங்களில் சிறிய குழந்தைகளுக்கு ஏற்ப கை கழுவும் தொட்டி, நவீன கழிப்பிட வசதி, விளையாட்டு பொருட்கள் ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் அரசால் முன்பருவகல்வி உபகரணங்கள், ஆரம்ப நிலையில் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி அளிப்பதற்கான உபகரணங்கள், செயல்பாட்டு புத்தகங்கள், கொசுவலை, முதலுதவிபெட்டி, தகவல் பலகை, பாய்கள், சுகாதார பொருட்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, அடிப்படை மருந்துகள், அசைந்தாடும் நாற்காலி, பாடங்களுக்கான கையேடுகள், பட அட்டைகள், கதை தொகுப்பு அட்டைகள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதத்தில் முழு மூச்சுடன் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. நம்நாட்டின் வருங்கால தூண்களான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தும், அடிப்படை கல்வியும், பெண்களின் முன்னேற்றத்தில் முக்கியபங்கு வகிக்கும் அங்கன்வாடி மையங்களின் சேவையை அனைவரும் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story