வேலூர் மாவட்டத்தில் பாபர்மசூதி இடிப்புதின பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார் தீவிர வாகன சோதனையும் செய்யப்படுகிறது


வேலூர் மாவட்டத்தில் பாபர்மசூதி இடிப்புதின பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார் தீவிர வாகன சோதனையும் செய்யப்படுகிறது
x
தினத்தந்தி 6 Dec 2018 4:30 AM IST (Updated: 5 Dec 2018 10:19 PM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிர வாகன சோதனையும் செய்யப்படுகிறது.

வேலூர்,

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று (வியாழக்கிழமை) அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுதலங்கள், நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டுவரும் பொருட்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது.

காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்துகின்றனர். ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்கிறார்கள்.

வேலூர் கோட்டையிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் போலீசார் குவிக்கப்பட்டு கோட்டைக்கு வரும் வாகனங்களை சோதனை செய்து அனுப்புகிறார்கள்.

அரக்கோணம், வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, குடியாத்தம், ஆம்பூர் போன்ற முக்கிய இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story