கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில்: ரூ.4 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு


கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில்: ரூ.4 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Dec 2018 3:30 AM IST (Updated: 5 Dec 2018 11:25 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், ஒரசோலை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையற்கூடம், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடக்கோடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.36 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலை, அதே பகுதியில் முதல்-அமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.1.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடு, நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட கைகாட்டி சன்சைன் நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.86 லட்சம் செலவில் கட்டப்பட்ட கால்வாய், கஸ்தூரிபாய் நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய சமையற் கூடம்,

உல்லத்தட்டியில் பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி, ஓடந்தொரை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட கான்கிரீட் சாலை, அதே பகுதியில் ஒருங்கிணைந்த வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.9.07 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை, கோடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கெரடாமட்டம் சுண்டட்டி பகுதியில் பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 37 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி, கர்சன் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் மதிப்பில் போடப்பட்ட கான்கிரீட் பாலம், கொணவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.8.4 லட்சம் செலவில் கிணறு, குழாய் உள்பட ரூ.4 கோடியே 29 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோல்டி சாராள், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story