உடன்குடி அருகே மண் ஆய்வு செய்த அணுசக்தி துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு
உடன்குடி அருகே மண் ஆய்வு செய்த அணுசக்தி துறை அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
உடன்குடி,
உடன்குடி அருகே மண் ஆய்வு செய்த அணுசக்தி துறை அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
மண் ஆய்வு
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரசின் அணுசக்தி துறை சார்பில், பல்வேறு இடங்களில் மண் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் மண்ணின் தன்மையை அறிந்து, நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக அணுசக்தி துறை அதிகாரிகள் சிலர் ஆங்காங்கே சில அடி ஆழம் பள்ளம் தோண்டி, ஆய்வுக்காக மண் சேகரித்தனர்.
இதற்காக அவர்கள் மத்திய அரசின் அனுமதி கடிதத்தை வைத்து இருந்தனர். ஆனால் அவர்கள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வருவாய் துறையினருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உடன்குடி பகுதியில் தாது மணல் ஆய்வு நடைபெறுவதாக தகவல் பரவியது.
சிறைபிடிப்பு
இந்த நிலையில் உடன்குடி அருகே கூழையன்குண்டு கிராமத்தில் தங்கலிங்கம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று மதியம் அணுசக்தி விஞ்ஞானி சுந்தர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வுக்காக மண் சேகரித்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அணுசக்தி துறை அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
உடனே குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி, உடன்குடி வருவாய் ஆய்வாளர் தாஹீர், கிராம நிர்வாக அலுவலர்கள் அசோக், துரைச்சாமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், அணுசக்தி துறை அதிகாரிகள் மண் ஆய்வுக்காக எந்த இடத்துக்கு சென்றாலும், முன்னதாக தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர் அவர்கள், அங்கு வருவாய் துறையினரையும் அழைத்து சென்று, ஆய்வுக்காக மண் சேகரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story