மண்ணும், நீரும் சிறப்பாக அமைந்தால் விவசாயிகள் திட்டமிட்ட இலக்கை எளிதாக அடைய முடியும்; கலெக்டர் பேச்சு


மண்ணும், நீரும் சிறப்பாக அமைந்தால் விவசாயிகள் திட்டமிட்ட இலக்கை எளிதாக அடைய முடியும்; கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 7:21 PM GMT)

மண்ணும், நீரும் சிறப்பாக அமைந்தால் ஒவ்வொரு விவசாயிகள் திட்டமிட்ட இலக்கை எளிதாக அடைய முடியும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூரில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறைகள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மண்வள தின விழா மற்றும் தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். தொடர்ந்து தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி குறித்த கண்காட்சி அரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:– ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5–ந் தேதி மண்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மண் தான் உலகம் என்பதை புரிந்து வாழ்ந்தால் எல்லோரும் ஏற்றம் பெறலாம்.

இன்றைய உலகில் அனைத்து விதமான புரட்சிகளும் செய்து சாதனை படைக்கும் மனிதர்களுக்கு வேளாண்மையும், விவசாயிகளும் தான் மூலதனம் ஆகும். அந்த வகையில் ஒவ்வொருவரின் பொருளாதார முன்னேற்றத்தின் பெரும் பங்கை வகிப்பது விவசாயம் ஆகும். ஒவ்வொரு துறையிலும் ஒரு காலக்கட்டத்தில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம். ஆனால் என்றைக்குமே நிலையான தொழில் விவசாயம் மட்டும் தான். நல்ல மண்ணும், நிலையான நீரும் அமைந்தால் விசாயிகள் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை. அந்த வகையில் விவசாயத்தின் பங்கு நீர் மற்றும் மண்ணில் உள்ளது.

அதிலும் குறிப்பாக மண்வள தினம் கொண்டாடுவதன் நோக்கம் விவசாய நிலத்தை எல்லோரும் முழுமையாக பாதுகாக்க வேண்டும் என்பதே ஆகும். மண் நன்றாக இருந்தால் தான் அதில் மேற்கொள்ளும் பயிர்கள் சிறப்பான பலனை தரும். அதற்கேற்ப மண்ணை பாதுகாப்பது ஒவ்வொரு விவசாயின் தலையாய கடமையாகும். வேளாண்மைத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விளை நிலங்களில் மண் பரிசோதனை செய்யப்படுகிறது. விவசாயிகள் இதை பயன்படுத்தி அதற்குரிய பயிர்களை நடவு செய்தால் அதிக அளவு மகசூல் பெற முடியும். மண்ணும், நீரும் சிறப்பாக இருந்தால் விவசாயிகள் திட்டமிட்ட இலக்கை எளிதாக அடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் இயற்கை விவசாயம் முறையில் சிறப்பாக செயல்பட்டு அதிக மகசூல் பெற்ற அரளிக்கோட்டை சீதாலெட்சுமி என்பவருக்கு வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 20 பயனாளிகளுக்கு மண்வள அட்டையும், 20 பயனாளிகளுக்கு காய்கறி சாகுபடிக்கான நாற்றுக்களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கால்நடைப் பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், கிராமிய பயிற்சி மைய இயக்குனர் அப்பாத்துரை, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், தோட்டக்கலை உதவி இயக்குனர் அழகுமலை, முன்னோடி விவசாயிகள் அய்யாச்சாமி, ஆபிரகாம், குமார் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story