போலி சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயற்சி - 2 வாலிபர்கள் கைது


போலி சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயற்சி - 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 6 Dec 2018 3:30 AM IST (Updated: 6 Dec 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நடத்தப்பட்ட ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் போலி சான்றிதழ் கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. இதில் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதில் தேர்வு பெற்றவர்களுக்கு கோவை ரெட்பீல்டில் உள்ள ராணுவ ஆட்கள் தேர்வு மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. அதில் தர்மபுரி மாவட்டம் சோகத்தூரை சேர்ந்த பரத் (வயது 23), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த பெருமாள் (21) ஆகியோர் சமர்ப்பித்த சான்றிதழ்கள் மீது ராணுவ அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அதிகாரிகள் அந்த சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து ராணுவ ஆட்கள் தேர்வு மைய அதிகாரி ரேனி கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பரத், பெருமாள் ஆகிய 2 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையில் பரத் பி.ஏ. படித்ததற்கான போலி சான்றிதழையும், பெருமாள் டிப்ளமோ படித்ததற்கான போலி சான்றிதழையும் தயாரித்து கொடுத்து உள்ளனர். இவர்கள் அனைவரும் உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவற்றில் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பின்போது சிக்கி உள்ளனர். அவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.

Next Story