நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதி கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதி கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 7:32 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவ, மாணவிகள் 10 பேருக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதியை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல்,

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களை ஊக்குவித்து, அவர்கள் மேல் படிப்பை தொடர்வதற்கு “தினத்தந்தி கல்வி நிதி” திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு 10 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2017-2018-ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு எழுதிய மாணவர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் என மொத்தம் 34 மாவட்டங்களில் (புதுச்சேரி உள்பட) இருந்து 340 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.34 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, தலா ரூ.10 ஆயிரம் “தினத்தந்தி” கல்வி நிதி பெற தகுதிபெற்ற 10 மாணவ, மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-

1. பி.திவ்யா, லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, அணியாபுரம். 2. ஏ.சவுமியா, மஹேந்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காளிப்பட்டி. 3. பி.தாமரைச்செல்வி, ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குருசாமிபாளையம். 4. ஜி.மகிலாம்பிகா, ஸ்ரீ விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வையப்பமலை. 5. எஸ்.கவுசல்யா, ஸ்ரீவித்யபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சக்கராம்பாளையம். 6. எஸ்.இலக்யா, வெற்றிவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம். 7. எஸ்.சுகுணா, அரசு மேல்நிலைப்பள்ளி, பொம்மம்பட்டி, நாமக்கல். 8. ஆர்.தருண், பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரெட்டிப்பட்டி. 9. ஜி.எஸ்.ஜோதிபிரகாஷ்ராஜ், எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்துக்காளிப்பட்டி. 10. எம்.தீபக், ஸ்ரீவிவேகானந்தா வித்யாலயம் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, எருமப்பட்டி.

இந்த 10 மாணவ-மாணவிகளுக்கு “தினத்தந்தி” கல்வி நிதி வழங்கும் விழா நாமக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது. விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. விழாவுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“இந்த நிகழ்ச்சி அரசு பள்ளியில் நடத்தப்பட முக்கிய காரணம் நீங்களும் இதுபோன்ற நிதியை பெற வேண்டும் என்பதற்கு தான். அடுத்த ஆண்டு இப்பள்ளியை சேர்ந்த 5 அல்லது 6 மாணவிகள் இந்த நிதியை பெறும் உத்வேகம் பெற வேண்டும் என்பதற்காக தான். மாணவிகளுக்கு கல்வியை தவிர வேறு எதுவும் முன்னேற்றம் தராது. கல்வியை எவராலும் திருடிச் செல்லமுடியாது. கல்வி இல்லாமல் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படாது. இது உங்களுக்கு படிக்க கூடிய வயது ஆகும். நீங்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பை முடித்து, போட்டி தேர்வு எழுதினால் தான், வேலைக்கு போக முடியும்.

பெண்கள் சுயமாக சம்பாதிக்கவேண்டும். அப்போது தான் நல்ல எதிர்காலம் அமையும். திருமணம் ஆன பிறகு ஏதாவது ஒரு காரணத்தால் கணவரை இழக்க நேரிடும் பெண்கள் என்னிடம் வேலை கேட்டு மனு கொடுப்பார்கள். அப்போது என்ன படித்து உள்ளர்கள்? என கேட்டால் 8-ம் வகுப்பு அல்லது 9-ம் வகுப்பு என்பார்கள்.

பெண்களுக்கு கல்வி மிக அவசியமானது ஆகும். பெண்கள் ஏதாவது ஒரு வேலைக்கு சென்ற பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். திருமணத்திற்காக ஒருபோதும் வேலையை விட்டு விடக்கூடாது. பெண் குழந்தைகளுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்பதற்காக தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளுக்கு “தினத்தந்தி” நிறுவனம் இத்தகைய பரிசுத்தொகையை வழங்கி வருகிறது.

மாணவ, மாணவிகளுக்கு படிப்பை தவிர வேறு எதுவும் உதவாது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கல்வி தான். எனவே நீங்கள் நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.”

இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் கூறினார்.

விழாவில் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல் பேசும்போது கூறியதாவது:-

“தினத்தந்தி” சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 340 மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் பெறுகிறார்கள் என்பதில் பள்ளி கல்வித்துறை பெருமை அடைகிறது.

அதிலும் பொம்மம்பட்டி அரசு பள்ளி மாணவி இந்த நிதியை பெறுகிறார் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வருகிற கல்வி ஆண்டில் 340 பேரும் அரசு பள்ளி மாணவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக “தினத்தந்தி” சேலம் கிளை மேலாளர் டி.ஜெகதீசன் வரவேற்றார். விழாவில் ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன், உதவி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் மோகன்ராஜ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை பார்வதி நன்றி கூறினார்.

Next Story