நாமக்கல்லில் போலி ஆவணம் தயாரித்து லாரியை விற்ற 7 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
நாமக்கல்லில் லாரியை திருடி போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து திருட்டு போன 2 லாரிகளை மீட்டனர்.
நாமக்கல்,
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த மாதம் 30-ந் தேதி சர்வீஸ் செய்வதற்காக நாமக்கல் அருகே காதப்பள்ளியில் உள்ள லாரி பட்டறையில் லாரி ஒன்றை கொண்டு வந்து நிறுத்தினார். அதை பட்டறை பணியாளர்கள் பழுது பார்த்தனர். அப்போது லாரியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து பணியாளர்கள் நல்லிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கண்ணனிடம் நடத்திய விசாரணையில், அது திருட்டு லாரி என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து லாரி திருட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த மாணிக்கம் (வயது 51), அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் கர்நாடக பதிவு கொண்ட லாரியை திருடிச்சென்றதும், அதற்கு போலி ஆவணம் தயார் செய்து சிவகங்கையை சேர்ந்த கண்ணனுக்கு ரூ.7 லட்சத்து 75 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
பின்னர் அந்த தொகையை கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் வேறு ஒரு திருட்டு வழக்கில் மாணிக்கம் கைது செய்யப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாணிக்கத்தின் கூட்டாளிகளான சேலத்தை சேர்ந்த செல்வக்குமார் (49), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த சாமிதுரை (33), போச்சம்பள்ளியை சேர்ந்த விஸ்வநாதன் (27), சேலம் மாவட்டம் பூலாம்பட்டியை சேர்ந்த சம்பத்குமார் (39), எடப்பாடியை சேர்ந்த வெள்ளியங்கிரி (49) மற்றும் மேட்டூரை சேர்ந்த குணசேகரன் (36), கார்த்திக் (36) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் 2 லாரிகளை மீட்டனர்.
மேலும் திருட்டில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
இந்த கும்பல் லாரிகளை திருடி, அதற்கு போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்வதையும், திருடப்படும் லாரியின் மீது தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவதையும் வழக்கமாக வைத்திருந்தனர். பின்னர் அந்த பணத்தை பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்டு உள்ள 2 லாரிகளின் மதிப்பு சுமார் ரூ.27 லட்சம் இருக்கும். அவைகள் நாமக்கல் வள்ளிபுரம் அருகே திருடப்பட்டவை ஆகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story