மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பரவலாக மழை
நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி, ஆலங்குளம், அம்பை, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. மேலும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 739 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 134.52 அடியாக உள்ளது.
மற்றொரு அணையான மணிமுத்தாறு அணைப்பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. நீர்மட்டம் 104.55 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 368 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடனாநதி அணை நீர்மட்டம் 78.80 அடியாகவும், ராமநதி அணை 69 அடியாகவும், கருப்பாநதி அணை 66.87 அடியாகவும், வடக்கு பச்சையாறு 31.50 அடியாகவும், கொடுமுடியாறு 34 அடியாகவும், குண்டாறு 35.75 அடியாகவும், அடவிநயினார் 92.50 அடியாகவும் உள்ளது. இந்த அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
குற்றாலம் அருவியில்
வெள்ளப்பெருக்கு
நேற்று காலை தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பழைய குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காலை 10 மணி முதல் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மெயின் அருவியில் ஆர்ச் மீது தண்ணீர் கொட்டியது. நேற்று காலையில் இங்கு மரக்கிளை ஒன்று அடித்து வரப்பட்டு ஆர்ச் மீது விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் குற்றாலம் வந்த அய்யப்ப பக்தர்கள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை 7.30 மணியளவில் கருமேகங்கள் திரண்டு திடீரென்று மழை பெய்தது. அதன்பிறகு வானம் கருமேகத்துடனே காணப்பட்டது. மழை பெய்யவில்லை. லேசான வெயில் அடித்தது. மாலை 3 மணிக்கு மீண்டும் கருமேகங்கள் திரண்டு திடீரென்று சாரல் மழை பெய்தது.
மழை அளவு
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம்-6, சேர்வலாறு-5, அம்பை-5, மணிமுத்தாறு-2, ராமநதி-2.
Related Tags :
Next Story