புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் மறுசீரமைப்பு குறித்து வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் விவசாயிகளுடன் கலந்துரையாடல்


புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் மறுசீரமைப்பு குறித்து வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
x
தினத்தந்தி 6 Dec 2018 4:15 AM IST (Updated: 6 Dec 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் மறுசீரமைப்பு குறித்து வேளாண் தொழில்நுட்பக் குழு வினர் விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயலினால் தஞ்சை, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு தாலுகா பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏராளமான வீடுகள், தென்னை, வாழை மரங்கள் நெல், மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர் களும் சேதம் அடைந்தன.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தென்னை, வாழை, பலா மரங்கள் உள்ளிட்டவைகளை வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் நேற்றுமுன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒருங்கிணைந்த தோட்டக்கலை இயக்கக இணை செயலாளர் தினேஷ்குமார், தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் பாலசுதாஹரி, தோட்டக்கலை ஆணையர் மூர்த்தி மற்றும் தமிழக வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை இயக்குனர் டாக்டர் சுப்பையன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நேற்று 2-வது நாளாக வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தென்னை மரங்களின் மறுசீரமைப்பு குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சிக்கு அரசு முதன்மை செயலாளரும், வேளாண்மை உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங்பேடி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தஞ்சை மாவட்ட தென்னை சாகுபடி விவசாய சங்கத்தலைவர் கலைச்செல்வன் பேசுகையில், “தென்னை சாகுடிபயில் ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு 150 காய்கள் காய்க்கும். குறைந்தது 7 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மகசூல் பெறுவதால் ஒரு தேங்காயின் விலை ரூ.15 என நிர்ணயித்தால், 7 ஆண்டுக்கு ரூ.15 ஆயிரத்து 750 வருமானம் ஈட்டக் கூடிய அளவிற்கு இருந்தது. இத்தகைய தொடர் வருமானம் கஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்”என்றார்.

தென்னை விவசாய சங்கத்தை சார்ந்த கோவிந்தராஜ் பேசுகையில், “கஜா புயலால் சாய்ந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தவும், அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளவும், விவசாயி ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் முன்பணம் வழங்க வேண்டும்” என்றார்

முன்னாள் எம்.எல்.ஏ. திருஞானசம்பந்தம் பேசுகையில், “இந்த பகுதியில் நெல்லைத்தவிர தென்னையை இது வரை நிறையபேர் அடங்கலில் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாதவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். சாய்ந்த தென்னை மரங்களின் வேர்ப்பகுதியை பிடுங்கி அப்புறப் படுத்த பொக்லின் ஏந்திரம் வழங்கவேண்டும்” என்றார். இதே போல் தென்னை விவசாயிகள் தங்கள் கருத்துகளை எடுத்துக்கூறினர்.

பின்னர் ககன்தீப்சிங்பேடி பேசுகையில், “கஜா புயலால் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங் களில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. விவசாயிகளின் உணர்வுகள் எனக்கு நன்றாக புரிகிறது. சாய்ந்த தென்னை மரங்களை அகற்றுவது குறித்தும் புதிய மரக் கன்றுகள் நடுவது குறித்தும் மற்றும் உங்களது அனைத்து கோரிக்கைகளும் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல முடிவு எடுக்கப் படும்”என்றார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனர் மதியழகன், ஒருங் கிணைந்த வேளாண்மைத்துறை இணை இயக்குனர் நெடுஞ்செழியன், துணை இயக்குனர் ஜஸ்டின், பேராவூரணி உதவி இயக் குனர் மதியரசன் மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story