தமிழ் உச்சரிப்பை போல ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்ற நடவடிக்கை


தமிழ் உச்சரிப்பை போல ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 7:58 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போலவே ஆங்கிலத்திலும் மாற்ற மாவட்ட நிர்வாகம் சார்பல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம்,

தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்களின் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் மாற்ற தமிழ் வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கையின்போது தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சரால் அறிவிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக திருவல்லிக்கேணி என்பதை ‘ட்ர்ப்ளிக்கேன்‘ என ஆங்கிலத்தில் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே ஆங்கிலத்திலும் உச்சரிப்பும், எழுத்துக்கூட்டலும் அமையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர்நிலைக் குழு ஆலோசனை குழு அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஊர் பெயர்களின் பட்டியலை அதற்கு இணையான ஆங்கில எழுத்துக்கூட்டலை மாவட்ட கலெக்டரின் பரிந்துரையுடன் மாற்றி அமைக்கப்படும்.

எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் பெயர்களின் உச்சரிப்பு தமிழில் அமைந்துள்ளது போலவே ஆங்கிலத்திலும் அதன் ஒலிகுறிப்பு மாறாமல் அமைய மாற்றப்பட வேண்டிய ஊர்களின் பெயர் பட்டியலை அதற்கு இணையான ஆங்கில உச்சரிப்பு எழுத்துக்கூட்டலுடன் இதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம்– 623 503 என்ற முகவரிக்கோ, tamilvalarchiramnad@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) முத்துமாரி தெரிவித்தார்.


Next Story