வண்ணார்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு புகார்; கலெக்டர் ஷில்பா ஆய்வு
நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பதாக வந்த புகாரின் பேரில் அந்த பகுதியில் கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.
நெல்லை,
நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பதாக வந்த புகாரின் பேரில் அந்த பகுதியில் கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஷில்பா ஆய்வு
நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெருவில் தனியாருக்கு சொந்தமான 21 வீடுகள் கொண்ட காம்ப்ளக்ஸ் உள்ளது. இந்த கட்டிடம் ஆக்கிரமிப்பு மற்றும் மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
இதையடுத்து கலெக்டர் ஷில்பா நேற்று அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி அனுமதித்த அளவை விட கூடுதல் இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளித்து அதற்குரிய அனுமதி பெறுமாறு கட்டிட உரிமையாளரிடம் கலெக்டர் ஷில்பா கேட்டுக்கொண்டார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
இதைத்தொடர்ந்து நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறப்பட்ட இடத்தை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆற்றுப்பகுதியில் எங்கு ஆக்கிரமிப்பு இருந்தாலும் அதை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் உடனே அகற்றவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், தாசில்தார் கந்தசாமி, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணநாயர், உதவி ஆணையாளர் சுப்புலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story