கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை போலீசில் தஞ்சம் ‘எங்களை பிரித்து விடாதீர்கள்’ என்று கெஞ்சியதால் பரபரப்பு


கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை போலீசில் தஞ்சம் ‘எங்களை பிரித்து விடாதீர்கள்’ என்று கெஞ்சியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 3:45 AM IST (Updated: 6 Dec 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

கணவரை உதறி விட்டு கல்லூரி மாணவருடன் ஓடிய ஆசிரியை போலீசில் தஞ்சம் அடைந்தார். அங்கு ‘எங்களை பிரித்து விடாதீர்கள்‘ என்று போலீசாரிடம் கெஞ்சியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண், ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் அன்று இரவு, ஆசிரியை தனது கணவரிடம் தனக்கும், ஒரு வாலிபருக்கும் பழக்கம் இருப்பதாகவும், அவரை மிகவும் விரும்புவதாகவும், பெற்றோர் தன்னை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும் கூறினார். இதை கேட்டு மணமகன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மணமகன், ஆசிரியையை அவருடைய பெற்றோர் வீட்டில் நடந்ததை கூறி விட்டு, அங்கேயே விட்டு சென்றார்.

இந்த நிலையில் திருமணமான 2 வாரத்தில் ஆசிரியை, தன்னுடைய காதலனுடன் ஓடிச் சென்று விட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிரியை, அவர் பணிபுரிந்து வரும் கல்லூரியில் படித்து வரும் மாணவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதும் தெரிய வந்தது.

இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த ஆசிரியை, கல்லூரி மாணவருடன் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். உடனே போலீசார் ஆசிரியையின் பெற்றோரை வரவழைத்தனர். மேலும் ஆசிரியையின் கணவரையும் அங்கே வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது தங்களால் காதலை மறக்க முடியவில்லை என்றும், எங்களை பிரித்து விடாதீர்கள் என்றும் ஆசிரியையும், மாணவரும் போலீசாரிடம் கெஞ்சினர். சட்டப்படி உங்களுடைய காதல் பொருந்தாது, திருமணமான 2 வாரத்தில் கணவனை உதறி விட்டு மாணவனுடன் வாழ்வது சரியாக இருக்காது என்று ஆசிரியையிடம் போலீசாரிடம் கூறினர். மேலும் காதலை சேர்த்து வைக்க முடியாது என்று ஆசிரியைக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

காதலியான ஆசிரியையை பிரிந்த வேதனையில் மாணவரும் தன்னுடைய வீட்டுக்கு சோகத்துடன் சென்றார். திருமணமான சில நாட்களில் கணவரை உதறி விட்டு மாணவருடன் போலீஸ் நிலையத்தில் ஆசிரியை தஞ்சமடைந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story