ரூ.15 கோடியில் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த திட்டம்; கவர்னர் நடவடிக்கை
புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று புதுவை கவர்னர் ஆய்வு நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மீனவர் சம்மேளனம் மூலம் அங்கு கேன்டீன் நடத்த கவர்னர் அறிவுறுத்தினார். மீன்வளத்துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிவாரண உதவிகள், முதியோர் பென்ஷன், மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கான உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார். மீனவர்களுக்கான நல சேவைகளை விரைவாக செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தவும், புதுப்பிக்கவும் ரூ.15 கோடிக்கு செயல் திட்டத்தை தயாரிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
வருகிற 8–ந்தேதி மீன்பிடி துறைமுக வளாகத்தில் சிரமதான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள், ஊழியர்களை கவர்னர் கேட்டுக்கொண்டார். அந்த பணியில் தன்னார்வலர்கள், மாணவர்களையும் பங்கெடுக்க செய்ய அவர் அறிவுறுத்தினார்.