மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஊர்வலம்– மறியல்
மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஊர்வலம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
ஆறுகளில் மணல் அள்ள மாட்டு வண்டிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற முதல்–அமைச்சரின் உத்தரவினை அமல்படுத்த வேண்டும், மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுவை பிரதேச மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை அவர்கள் இந்திராகாந்தி சிலை அருகே கூடினார்கள். அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்துக்கு மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க (சி.ஐ.டி.யு.) தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தலைவர் முருகன், நிர்வாகிகள் ராமசாமி, பிரபுராஜ், செல்வராஜ் உள்பட பலர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
ஊர்வலம் ராஜீவ்காந்தி சிக்னல் அருகே சென்றபோது அதற்கு மேல் செல்லவிடாமல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் அங்கேயே ரோட்டில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.