சித்தாள் வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி பெண்ணின் காதை அறுத்து தங்க கம்மல் பறிப்பு


சித்தாள் வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி பெண்ணின் காதை அறுத்து தங்க கம்மல் பறிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 3:45 AM IST (Updated: 6 Dec 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

சித்தாள் வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி பெண்ணின் காதை அறுத்து தங்க கம்மலை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி புஷ்பவள்ளி (வயது 55). இவர் சித்தாள் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இதனால் புஷ்பவள்ளி தனது கணவருடன் வசித்து வருகிறார். ரங்கநாதன் நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளதால், புஷ்பவள்ளி சித்தாள் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று காலை ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் சாலை காந்தி பூங்கா அருகே சித்தாள் வேலைக்கு செல்வதற்காக புஷ்பவள்ளி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் புஷ்பவள்ளியிடம் தான் சித்தாள் வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி மதனத்தூர் கொள்ளிடக்கரை பகுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்குள்ள சீமைக்கருவேல மரக்காட்டில் வைத்து புஷ்பவள்ளியின் கழுத்தை நெரித்து, முகத்தில் மயக்கப்பொடி தூவி, அவரது 2 காதுகளிலும் கிடந்த முக்கால் பவுன் கம்மல் (தோடு மற்றும் மாட்டல்களை) பறித்துள்ளார். ஆனால் அது மர்மநபர் கைக்கு சிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த புஷ்பவள்ளியின் 2 காதுகளையும் லேசாக அறுத்து கம்மலை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதில் காதில் ரத்தம் வழிந்தவாறு அவர் மயங்கி கிடந்தார். இதனை அப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் ஓடிவந்து, புஷ்பவள்ளியின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 2 காதுகளிலும் தையல் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story