கோவிலில் சாமி சிலையை வைக்கும் விவகாரம்: கோவிந்தபாடியில் இரு தரப்பினர் சாலை மறியல் பதற்றம்-போலீஸ் குவிப்பு


கோவிலில் சாமி சிலையை வைக்கும் விவகாரம்: கோவிந்தபாடியில் இரு தரப்பினர் சாலை மறியல் பதற்றம்-போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 4:15 AM IST (Updated: 6 Dec 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் அருகே கோவிந்தபாடியில் கோவிலில் சாமி சிலையை வைப்பது தொடர்பாக இரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொளத்தூர், 

கொளத்தூர் அருகே காவேரிபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கோவிந்தபாடி. இங்கு பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு பூசாரியை நியமிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை எழுந்தது. இதனிடையே கடந்த ஆண்டு திருவிழா நடத்த இரு தரப்பினரும் முயன்றனர். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தொடர்ந்து வருவாய்த்துறையினர் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து ஒரு தரப்பினர் கோர்ட்டை நாடி கோவிலை திறக்க உத்தரவு பெற்றனர். இதன்படி மேட்டூர் வருவாய்த்துறையினர் கோவிலை திறந்தனர். மேலும் இந்து சமய அறநிலைய துறையின் பூசாரி மூலம் பூஜை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அதே ஊரில் மற்றொரு தரப்பினர் வசம் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மன் சிலையை எடுத்து, பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் உத்தரவு பெற்றனர்.

இந்த உத்தரவை தொடர்ந்து நேற்று மேட்டூர் உதவி கலெக்டர் லலிதா தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் திரவுபதியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மன் சிலையை எடுத்து, அதனை பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் வைக்க முயன்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து கோவிந்தபாடியில் இரு தரப்பினரும் மாறி, மாறி மேட்டூர்-மைசூரு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது ஒரு தரப்பினர் சாமி சிலையை வைக்கும் விவகாரத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம். மேலும் திரவுபதியம்மன் கோவில் சாவியை வைத்துள்ள பூசாரி உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் கால அவகாசம் அளித்து, நாளை (வெள்ளிக்கிழமை) திரவுபதியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மன் சிலையை, பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் வைக்கப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். எனினும் அந்த பகுதியில் பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story