கர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி குமாரசாமி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
கர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியை அரசு வழங்கி வருகிறது.
மந்திரி பேட்டி
இந்த நிலையில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்திற்கு மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி
கர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பி.யூ.கல்லூரி, முதல் நிலை கல்லூரி மற்றும் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள பெண் குழந்தை களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு (2017-18) முதலே அமல்படுத்தப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.95 கோடி செலவாகும். இதன் மூலம் மாநிலத்தில் 3.70 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
சுற்றுலா தலங்களை...
கன்னட திரைப்படங்களில் கர்நாடகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை படம் பிடித்து காட்டினால், அதற்கு நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திரைப்பட சுற்றுலா கொள்கையை அமல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. திரைப்படங்களில் சுற்றுலா தலங்களை காட்டினால் ரூ.1 கோடியும், பெரிய அளவில் சுற்றுலா தலங்களை காண்பித்தால் ரூ.2½ கோடியும் நிதி உதவி அளிக்கப்படும்.
விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்த விரும்புபவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அதற்கு அனுமதி வழங்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும்.
12 ஏரிகளில் நீர்நிரப்ப ரூ.15 கோடி ஒதுக்கீடு
பீதர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படாமல் முடங்கிப்போய் உள்ளது. அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர ரூ.20 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடப்பிரபா இடதுபுற கால்வாயை நவீனப்படுத்த ரூ.573 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகாவில் உள்ள ஹாட்யா கிராமம் அருகே காவிரி ஆற்றில் இருந்து நீர் எடுத்து 12 ஏரிகளை நிரப்ப ரூ.15 கோடி ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. ரேஷன் கடைகளை நடத்தும் வணிகர்களுக்கு குவிண்டாலுக்கு லாபம் ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு படி உயர்வு
ேமலும் 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில படிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.400 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகாவில் முதல் நிலை கல்லூரி தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.3.40 கோடி நிதி ஒதுக்கப்படும்.
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இங்கு 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.450 கோடி செலவாகும். கட்டமைப்பு பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
கல்வி கட்டணத்தை...
கர்நாடக இலவச மற்றும் கட்டாய கல்வி பெற குழந்தைகள் உரிமை விதிமுறைகளின்படி அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில் தனியார் பள்ளிகள் இருந்தால், அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தை களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.
குமாரசாமி தலைமையில்...
முன்னதாக கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். இதில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் உள்ள மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கலந்து கொள்ளவில்லை.
Related Tags :
Next Story