உடலில் இருந்த மச்சத்தால் வந்த குழப்பம்: ஆபாச வீடியோவில் நடித்ததாக கூறி தாக்கியதால் தாய் வீட்டுக்கு சென்ற கர்ப்பிணி
பெங்களூருவில், உடலில் இருந்த மச்சத்தால் வந்த குழப்பத்தில் ஆபாச வீடியோவில் நடித்ததாக கூறி தாக்கியதால் கர்ப்பிணி மனைவி, தனது கணவருடன் வாழ பிடிக்காமல் தாய் வீட்டுக்கு சென்றார்.
பெங்களூரு,
பெங்களூருவில், உடலில் இருந்த மச்சத்தால் வந்த குழப்பத்தில் ஆபாச வீடியோவில் நடித்ததாக கூறி தாக்கியதால் கர்ப்பிணி மனைவி, தனது கணவருடன் வாழ பிடிக்காமல் தாய் வீட்டுக்கு சென்றார். மனநல மருத்துவரை பார்க்கும்படி அவரது கணவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்
பெங்களூருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ் (வயது 37). இவருடைய மனைவி லட்சுமி (31). இவர்கள் 2 பேரின் பெயர்களும் மாற்றப்பட்டு உள்ளது. இவர்கள் 2 பேருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
வெங்கடேஷ், தனியார் ஆன்-லைன் வர்த்த நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், 2-வது முறையாக லட்சுமி கர்ப்பம் ஆனார். அவர் 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
ஆபாசபடம் பார்த்து சந்தேகம்
வெங்கடேசுக்கு இணையதளங்களில் ஆபாசபடம் பார்க்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் அவர் இணையதளத்தில் ஒரு ஆபாசபடம் பார்த்துள்ளார். அந்த படத்தில் இடம் பெற்றிருந்த பெண்ணின் உடலில் இருந்த மச்சங்கள், அவருடைய மனைவியின் உடலில் உள்ள மச்சங்கள் போல் ஒரே மாதிரி இருப்பதாக அவர் நினைத்தார்.
இதனால் ஆபாசபடத்தில் தனது மனைவி நடித்ததாக அவர் சந்தேகித்தார். இதுபற்றி அவர் தனது மனைவியிடம் கேட்டார். அதற்கு அவர் மறுத்தார். அத்துடன், தான் எந்த ஆபாசபடங்களிலும் நடிக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனால் கோபம் அடைந்த வெங்கடேஷ் தனது மனைவியை தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆலோசனை
அத்துடன் வெங்கடேஷ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி எச்.ஏ.எல். போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை பரிசீலனை செய்த போலீசார், வெங்கடேசுக்கு ஆலோசனை வழங்க வேண்டி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் வனிதா சகாயவாணி ஆலோசனை மையத்துக்கு அவரை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வெங்கடேசுக்கு அந்த அமைப்பினர் ஆலோசனை வழங்கினர். ஆனால், அவர் ஆலோசகர்களின் ஆலோசனையை கேட்டு கொள்ளாமல் தனது மனைவி மீதான சந்தேகத்தில் உறுதியாக இருந்தார். இதனால், மனநல டாக்டரை பார்க்கும்படி வெங்கடேசுக்கு ஆலோசனை மையத்தினர் அறிவுறுத்தினர். இதற்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் கணவர் வெங்கடேசுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் பிரிந்து அவருடைய மனைவி லட்சுமி ஆந்திராவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
சைபர் கிரைம் போலீசார் உறுதி செய்தனர்
இதுகுறித்து வனிதா சகாயவாணி அமைப்பின் ஆலோசகர் கூறியதாவது:-
வெங்கடேஷ் புகாரை தொடர்ந்து அந்த ஆபாச வீடியோ சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த வீடியோவை இந்தியாவை சேர்ந்தவர் பதிவேற்றம் செய்யவில்லை என்பதும், அந்த வீடியோவில் இடம் பெற்றிருப்பது அவருடைய மனைவி இல்லை என்பதும் உறுதியானது. ஆனாலும் வெங்கடேஷ் தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறார்.
அவர் பார்த்த வீடியோவில் தோன்றிய பெண்ணின் உடலில் இருந்த மச்சங்களால் இந்த பிரச்சிைன உருவாகி உள்ளது. அதிகமாக ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கத்தை கொண்டுள்ள வெங்கடேஷ், அதில் தோன்றும் பெண்களை தனது மனைவியுடன் ஒப்பிட்டு பார்ப்பதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று மனநல மருத்துவரை பார்க்க அவருக்கு ஆலோசனை கூறினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story