அமைச்சர்கள் ஏற்பாட்டில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு


அமைச்சர்கள் ஏற்பாட்டில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 4:15 AM IST (Updated: 6 Dec 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் அமைச்சர்கள் ஏற்பாட்டில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்து நேற்றோடு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையொட்டி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டின் பேரில் நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 18-வது வார்டு நிர்வாகி ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் வளர்மதி ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல திருச்சி மாநகரில் பல இடங்களில் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் ஜெயலலிதா உருவப்படத்தை அலங்கரித்து வைத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் அ.தி.மு.க.வினர் பலர் கருப்பு சட்டையும், கருப்பு பட்டையும் அணிந்திருந்தனர்.

Next Story