பெங்களூரு அருகே கார் மீது மற்றொரு கார் மோதல் விபத்தில் 4 வாலிபர்கள் சாவு; 8 பேர் படுகாயம்


பெங்களூரு அருகே கார் மீது மற்றொரு கார் மோதல் விபத்தில் 4 வாலிபர்கள் சாவு; 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Dec 2018 3:45 AM IST (Updated: 6 Dec 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் 4 வாலிபர்கள் உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெங்களூரு, 

பெங்களூரு அருகே கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் 4 வாலிபர்கள் உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். நண்பரின் பிறந்தநாளை கொண்டாட சென்றவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

4 பேர் சாவு

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா கண்ணமங்களா பாளையா கேட் அருகே பெங்களூரு-பல்லாரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் பின்னால் வந்த ஒரு கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதனால் முன்னால் சென்ற கார், சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில், அந்த கார் முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்தது. அதுபோல, விபத்தை ஏற்படுத்திய காரின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.

இதனால் விபத்திற்கு உள்ளான காரில் இருந்த 4 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 2 கார்களில் இருந்த 8 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி அறிந்ததும் பெங்களூரு விமான நிலைய போக்குவரத்து போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நண்பரின் பிறந்தநாளை கொண்டாட...

போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் பெங்களூரு ஆர்.டி.நகரை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 28), விகாஷ்(24), சதீஷ்(24), சுந்தர் என்ற சுந்தரேஷ்(25) என்பதும், இவர்களுடன் காரில் பயணம் செய்த அவினாஷ், அஜித், பரத், ரவி, ஹேமந்த் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது. இவர்கள் 9 பேரும் திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு பூக்கள் அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தனர். இவர்களில் அவினாசுக்கு பிறந்தநாள் ஆகும். தங்களுடன் வேலை பார்க்கும் நண்பரான அவினாசின் பிறந்தநாளை கொண்டாட நந்திமலைக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி 4 பேரும் பலியானது தெரியவந்துள்ளது.

அதுபோல, விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த மனோஜ், மது, ஹித்தோதர் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தவர்கள் ஆவார்கள். விபத்தை ஏற்படுத்திய காரை டிரைவர் அதிவேகமாக ஓட்டியதால், அவரது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து விமான நிலைய போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story