சுடுகாட்டுக்கு நிரந்தர பாதை ஏற்படுத்தி தரக்கோரி: பிணத்துடன் பொதுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு


சுடுகாட்டுக்கு நிரந்தர பாதை ஏற்படுத்தி தரக்கோரி: பிணத்துடன் பொதுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 10:06 PM GMT)

குழிப்பாந்தண்டலத்தில் சுடுகாட்டுக்கு நிரந்தர பாதை ஏற்படுத்தி தரக்கோரி பிணத்துடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாமல்லபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு வடக்கு பக்க சாலை வழியாக பிணங்களை கொண்டு சென்று கிராம மக்கள் கடந்த 60 ஆண்டு காலமாக தகனம் மற்றும் அடக்கம் செய்து வந்தனர். இந்த நிலையில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை வழியில் உள்ள பட்டா இடத்தை தனி நபர் ஒருவர் வாங்கி சாலையின் குறுக்கில் தடுப்புச்சுவர் எழுப்பியுள்ளார்.

இதனால் பிணங்களை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல மாற்று வழி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கிராம மக்கள் வருவாய்த்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். வருவாய்த்துறை ஏற்படுத்தி கொடுத்த மாற்று பாதை வழியாக பிணங்களை கொண்டு செல்ல பக்கத்து கிராமமான எச்சூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று குழிப்பாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த காளி என்பவர் மனைவி ரோசம்மாள் (வயது 50) என்பவர் மரணம் அடைந்தார். பிணத்தை வழக்கமாக எடுத்து செல்லும் சாலை வழியாக அந்த கிராம மக்கள் எடுத்து சென்றனர். போலீசார் தடுப்பு சுவர் எழுப்பிய பட்டாதாரர் நிலம் வழியாக பிணத்தை எடுத்து செல்ல அனுமதிக்காததால் தங்களுக்கு நிரந்தர பாதை ஏற்படுத்தி தரக்கோரி சாலையில் பிணத்தை வைத்து குழிப்பாந்தண்டலம் கிராம மக்கள் 400 பேர் காஞ்சீபுரம் மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் காரணை ராதா தலைமையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் திருக்கழுக்குன்றம் தாசில்தார் வரதராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் அடங்கிய குழுவினர் பா.ம.க. மாவட்ட செயலாளர் காரணை ராதா, அமைப்பு செயலாளர் என்.எஸ்.ஏகாம்பரம், மாவட்ட நிர்வாகிகள் ரவீந்திரன், நைனியப்பன், நடராஜன், குச்சிக்காடு ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மற்றும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சுடுகாட்டுக்கு மாற்று வழி ஏற்படுத்தி தருவதாக வருவாய்த்துறையினர் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் மறியலை கைவிட்டு ஒரு இடத்தில் பிணத்தை போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்தனர்.

குழிப்பாந்தண்டலம் கிராம மக்களின் மறியல் போராட்டம் காரணமாக மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போதும் அங்கு பதற்ற நிலை உள்ளதால் குழிப்பாந்தண்டலம் பகுதியில் சுமார் 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story