வேலூரில் ரூ.3 லட்சம் போலி மசாலா பொருட்கள் பறிமுதல் 3 முகவர்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை


வேலூரில் ரூ.3 லட்சம் போலி மசாலா பொருட்கள் பறிமுதல் 3 முகவர்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 6 Dec 2018 4:00 AM IST (Updated: 6 Dec 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான போலி மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 முகவர்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர், 

சென்னையை தலைமையிடமாக கொண்டு ஒரு தனியார் மசாலா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான மசாலா பொருட்கள் தமிழகம், ஆந்திர மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலூர் மாநகரில் உள்ள கடைகளில் தனியார் மசாலா நிறுவனத்தின் பெயரிலேயே அச்சிடப்பட்டு போலி மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை கண்ட முகவர்கள் இதுகுறித்து சென்னையில் உள்ள நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அந்த நிறுவன மேலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வேலூருக்கு வந்து பல கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் போலி மசாலா பொருட்கள் விற்பனை செய்வது உறுதியானது.

இதுகுறித்து மசாலா நிறுவன உரிமையாளர் பிரதீம்சிங் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவர் போலி மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் மற்றும் அவை வைக்கப்பட்டிருக்கும் குடோன்களையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அவர்கள் தெரிவித்த கடைகளுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மசாலா பொருட்கள் மற்றும் குடோனில் வைக்கப்பட்டிருந்த மசாலா பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மெயின்பஜார் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான போலி மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார், போலி நிறுவன முகவர்கள் பெரிய அல்லாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 50), ரங்காபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (37), லத்தேரியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் கொசப்பேட்டையை சேர்ந்த சாய்நரசிம்மன் (40) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story