குடியாத்தம் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை காதலன் கண்முன்பே பரிதாபம்


குடியாத்தம் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை காதலன் கண்முன்பே பரிதாபம்
x
தினத்தந்தி 6 Dec 2018 3:45 AM IST (Updated: 6 Dec 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே காதலன் கண்முன்பே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம், 

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த மேல்செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பவித்ரா (வயது 21). ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது கிராமத்திற்கு அருகே உள்ள கீழ்செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகன் வெங்கடாஜலபதி (22), பால் வியாபாரி.

பவித்ராவும், வெங்கடாஜலபதியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் அவர்களது கிராமம் அருகே உள்ள சரகுப்பம் பகுதியில் ஒரு நிலத்திற்கு அருகே இருவரும் சந்தித்து கொண்ட போது தன்னிடம் ஏன் பேசுவதில்லை என வெங்கடாஜலபதி, பவித்ராவிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து தன்னை காதலிக்க வற்புறுத்தி உள்ளார். அதற்கு பவித்ரா மறுத்துள்ளார். வெங்கடாஜலபதி தொடர்ந்து வற்புறுத்தவே பவித்ரா காதலன் கண்முன்னே அங்கிருந்த கிணற்றில் குதித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடாஜலபதி இதுகுறித்து ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிதம்பரம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இருந்து பவித்ராவை பிணமாக மீட்டனர்.

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக வெங்கடாஜலபதியை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story