கோபி அருகே துணிகரம்: வங்கியில் பணம் எடுத்து வந்த முதியவரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி - மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கோபி அருகே துணிகரம்: வங்கியில் பணம் எடுத்து வந்த முதியவரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Dec 2018 4:07 AM IST (Updated: 6 Dec 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த முதியவரிடம் ரூ.2 லட்சத்தை வழிப்பறி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சுட்டிக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் காளியண்ணன் (வயது 70). விவசாயி. இவர் நேற்று முன்தினம் நம்பியூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். பின்னர் அவர் அந்த வங்கியில் தனது கணக்கில் ரூ.3 லட்சம் எடுத்தார். பின்னர் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் ரூ.90 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

மீதமுள்ள ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு அவர் அங்கிருந்து பஸ் ஏறி சுட்டிக்கல் மேடு பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் மாலை வந்து இறங்கினார்.

இதைத்தொடர்ந்து காளியண்ணன் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து வந்தனர். காளியண்ணன் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்து மர்மநபர், காளியண்ணன் வைத்திருந்த பையை வெடுக்கென பிடுங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காளியண்ணன் ‘திருடன்..., திருடன்...’ என்று சத்தம் போட்டு கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து காளியண்ணன் கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவரிடம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story