ஆம்பூரில் விபத்துகளை குறைக்க தேசிய நெடுஞ்சாலையில் ரூ.2¼ லட்சத்தில் தானியங்கி சிக்னல் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க ரூ.2¼ லட்சத்தில் நிறுவப்பட்ட தானியங்கி சிக்னல்களை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
ஆம்பூர்,
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அமைந்துள்ளது. இந்த நகரை தேசிய நெடுஞ்சாலை இரு பிரிவாக பிரிக்கிறது. இந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் நகரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயலும் பலர் வாகனங்களில் சிக்கி இறக்கின்றனர். பலர் காயம் அடைகின்றனர். குறிப்பாக ஆம்பூர் பஸ் நிலையம், ராஜீவ்காந்தி சிலை சந்திப்பு, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளி சந்திப்பு ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் ஆம்பூரில் தாமதமாகி வருவதால், இந்த விபத்துகளை குறைக்க துணை போலீஸ்சூப்பிரண்டு சச்சிதானந்தம் முயற்சி மேற்கொண்டார்.
அதன்படி ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளி சந்திப்பு சாலையின் இருபுறமும் ரூ.2¼ லட்சம் செலவில் தானியங்கி சிக்னல்கள் மற்றும் 2 நடைபாதை சிக்னல் ஆகியவற்றை ஆம்பூர் ஸ்டார் பிரியாணி சார்பில் அதன் இயக்குனர் மூனீர்அஹமத் நன்கொடையாக வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் சிக்னல்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இயக்குனர் ரயீஸ்அஹமத், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், கோகுல்ராஜ், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் சி.கிருஷ்ணன், இந்து கல்விச்சங்க நிர்வாகிகள் டாக்டர் காந்திராஜ், ராமமூர்த்தி, நகர வர்த்தக சங்க தலைவர் கே.ஆர்.துளிசிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story