கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:30 PM GMT (Updated: 5 Dec 2018 10:44 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவி செய்யுமாறு நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை, 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவி செய்யுமாறு நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

நடிகர் அமிதாப் பச்சன்

தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள மேலும் பல மாவட்டங்களும், புதுச்சேரியும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. 3.7 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். 3.4 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 50 முதல் 80 சதவீத தென்னை மரங்கள் விழுந்துள்ளன. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் இருக்கிறார்கள். போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இது மதிப்பிடப்பட்ட சேத விவரங்கள்தான். ஆனால் இங்கு ஏற்பட்டுள்ள அழிவு என்பது கற்பனைக்கு எட்டாதது.

உதவி செய்யுங்கள்

மத்திய-மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்களும், சமூக நல இயக்கங்களும், மக்களுக்கு உதவி செய்து வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தினரும் களத்தில் நின்று வேலை செய்கிறார்கள். இந்தியாவில் ஒரே தேசம் ஒரே மக்களாக ஒற்றுமையுடன் இருக்கிறோம். சகோதரத்தை உணர்த்த இது சரியான நேரம். மக்கள் கஜா புயல் பாதிப்பில் இருந்து மீள அனைவரும் உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

இதற்காக அமிதாப்பச்சனுக்கு, கமல்ஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். ‘‘கஜா புயல் பாதிப்புகளை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். நாட்டு மக்கள் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக செயல்பட நீங்கள் ஒரு நூலாக செயல்படுவதற்கு நன்றி’’ என்று கூறியுள்ளார்.

Next Story