குடியாத்தம் அருகே 11 காட்டு யானைகள் அட்டகாசம் 5 ஏக்கர் வாழை நாசம்


குடியாத்தம் அருகே 11 காட்டு யானைகள் அட்டகாசம் 5 ஏக்கர் வாழை நாசம்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:45 PM GMT (Updated: 6 Dec 2018 4:47 PM GMT)

குடியாத்தம் அருகே 11 காட்டு யானைகள் அட்டகாசத்தால் 5 ஏக்கர் வாழை தோட்டம் நாசமானது.

குடியாத்தம், 

குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள நிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் இப்பகுதியை ஒட்டியபடி ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. அங்கிருந்தும் யானைகள் தமிழக எல்லைக்குள் வந்து கிராமப்புற பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துகிறது.

குடியாத்தத்தை அடுத்த தனகொண்டபல்லி பகுதியில் குத்தூஸ் என்பவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் வாழைத்தோட்டம் உள்ளது. நேற்று அதிகாலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து 3 குட்டி யானை உள்பட 11 யானைகள் கொண்ட கூட்டம் தமிழக எல்லைக்குள் வந்தது. அங்கிருந்து குத்தூஸ் என்பவருடைய வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது.

அந்த யானைக்கூட்டம் தொடர்ந்து ஆம்பூரான்பட்டி வழியாக வழியில் உள்ள நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியது. தற்போது தீர்த்தமலை வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனவர் ரவி, வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், பூபதி உள்ளிட்ட வனத்துறையினர் யானைக்கூட்டத்தை மீண்டும் ஆந்திர மாநில சரணாலயத்திற்கு விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் விரட்டி வருகின்றனர்.

Next Story