கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2018 4:15 AM IST (Updated: 7 Dec 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கோரிக்கைளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று முன் தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் முத்துராமன் வரவேற்றார். மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணைத்தலைவர் அறிவழகன், மாவட்ட இணைச் செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்போராட்டத்தின் போது, வருவாய் நிர்வாக ஆணையர் அளித்த வாக்குறுதியின்படி மாவட்ட மாறுதலை ஒரே சமயத்தில் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். வரும் காலத்தில் மாவட்ட மாறுதலை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களில் 50 சதவீதம் பெண்கள் இருப்பதால், அவர்களுக்கு கழிப்பறை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மேலும் வாடகை கட்டிடத்தில் இயக்கும் அலுவலகத்திற்கு, முறையாக அரசு வாடகை வழங்க வேண்டும்.

கணினி உபகரணங்கள் மற்றும் இணையதள சேவையும் வழங்காமல் இருந்த போதிலும், சொந்த செலவில் ஐந்து ஆண்டுகளாக கணினிச் சான்றுகள் வழங்கப்படுகின்றன. எனவே கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் இதுவரை சொந்த செலவில் செய்த செலவினத்தொகையை உடனே வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படைக் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். சலுகைகள், பணப்பலன்கள், பதவி உயர்வுகளை வருவாய்த்துறை அலுவலர்களிடமிருந்து பெற பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே புதிய கிராம நிர்வாகத்துறையை அரசு உருவாக்கித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story